காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் 400 பேர், காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ஊடுருவல் செய்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாகக் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தீவிரவாதிகள் தற்போது எல்லையில் ஊடுருவிப் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். ஏப்ரல் 2ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் 3 பேரும் பொதுமக்கள் தரப்பில் 4 பேரும் உயிரிழந்திருந்தனர். அந்தத் தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள குத்வானி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த மோதலில், குத்வானி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர், தொடர்ந்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தொடர்ந்து, குல்காம் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில் மொபைல் போன், இண்டர்நெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்�,