திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காத்துக்கிடக்கின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இன்று 11ஆவது நாளாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டதையடுத்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்துவருகின்றனர். தங்கள் தலைவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் இரவு-பகல் பாராமல் மருத்துவமனை முன்பே காத்திருக்கும் அவர்கள் எழுந்து வா தலைவனே என்று இடைவிடாமல் இடும் முழக்கம் ஆழ்வார்பேட்டை பகுதியையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது.
இன்று காலை முதல் வெளியூர்களிலிருந்தும் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு எழும்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காலை 9.35 மணிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தனர். இதுபோலவே தமாகா நிர்வாகிகளுடன் வாசனும் மருத்துவமனைக்கு வந்தார். மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்டோரிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். கலைஞரின் மன தைரியத்தால் விரைவில் குணமடைந்து மீண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் எனது நண்பரும், திமுக தலைவருமான கலைஞர் முழுமையான உடல்நலம் பெற வேண்டும்; மக்கள் பணியாற்ற வேண்டும் என்று விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கோபாலபுரம் இல்லம் அமைந்துள்ள பகுதியில் தடுப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.�,”