இந்தியாவிலுள்ள காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்த்ரா, விப்ரோ உள்ளிட்ட முக்கிய ஐ.டி. நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் அதிகப்படியான பணிநீக்க நடவடிக்கையால் ஐ.டி. ஊழியர்களுக்கும் தொழிற்சங்கம் தேவை என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
மற்ற அனைத்து துறைகளுக்கும் குறிப்பாக உற்பத்தித்துறை, பாரம்பர்யத் தொழில்கள் போன்று பல துறைகளுக்கும் தொழிற்சங்கம் இருக்கும்போது ஐ.டி. ஊழியர்களுக்கு மட்டும் தொழிற்சங்கம் வைத்துக்கொள்ள ஐ.டி. நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இதனால், தற்போது எந்தக் காரணமுமின்றி ஐ.டி. ஊழியர்கள் பணியிலிருந்து ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தும்போதுகூட ஐ.டி. நிர்வாகத்தை எதிர்க்க முடியாத சூழல் ஐ.டி. ஊழியர்களிடம் நிலவி வருகிறது.
தமிழக ஐ.டி. ஊழியர்கள் மன்றம் (FITE), காக்னிசன்ட் உள்ளிட்ட பல ஐ.டி. நிறுவனங்கள் எந்தக் காரணமுமின்றி பணிநீக்கம் செய்வதைத் தடுக்கக்கோரி தமிழகத் தொழிலாளர் துறையிடம் மனு அளிக்கவிருப்பதாக 24.05.2017 அன்று கூறியுள்ளது. அக்கென்ஜர், காக்னிசன்ட், ஹெச்.சி.எல்., ஐ.பி.எம்., இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ உள்ளிட்ட 50 ஐ.டி. நிறுவனங்களில் உள்ள பணியாளர்களை இணைத்து தொழிற்சங்கம் அமைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து டி.சி.எஸ் ஊழியர் ஒருவர் கூறும்போது, “எனக்கு 35 வயதாகிறது. நான் தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்படுவதால் நிர்வாகம் என்னை பணிலியிருந்து நீக்குமானால் நான் வேறு நிறுவனத்தில் இணைந்துக் கொள்வேன். அதுபற்றிக் கவலை இல்லை” என்று கூறுகிறார்.
முன்னணியில் உள்ள எல்லா ஐ.டி. நிறுவனங்களும் வருடத்துக்கு 2-3 சதவிகிதப் பேரை குறைவான செயல்திறன் உள்ளதாகக் கூறி பணிநீக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. மார்ச் மாதத்தில் மட்டும் காக்னிசன்ட் நிறுவனம் 6,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.�,