புல்வாமா தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் குறைந்தது 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று கன்வல் ஜீத் சிங் தில்லோன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்னுமிடத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்து காஷ்மீரில் பதுங்கியிருக்கிற தீவிரவாதிகளை என்கவுன்டர் செய்யும் பணியில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகரில் உள்ள 15 கார்ப்ஸ் லெப்டினென்ட் ஜெனரல் அதிகாரி கன்வல் ஜீத் சிங் தில்லோன் நேற்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 21 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் குறைந்தது 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் எட்டு பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 10 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 14 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்றார்.
மேலும், “ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையை அழிப்பதுதான் எங்களுடைய முக்கிய குறிக்கோள். அதைக் கடந்த மூன்று வாரங்களாகச் சிறப்பாகச் செய்து வருகிறோம். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளையும், மற்ற வெளிநாட்டுத் தீவிரவாதிகளையும் ஒழிக்கும் வரை எங்கள் ஆபரேசன் தொடரும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்” என்றும் தில்லோன் கூறினார்.�,