ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 9) லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியா விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அவரது முடிவுக்கு ஏற்றாற்போல மைதானம் தொடக்கம் முதலே பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் விரைவாக ரன்கள் சேர்த்தனர். ரோஹித் ஷர்மா – ஷிகர் தவன் இணை முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் 57 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் தவனுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க, தவன் சதத்தைக் கடந்தார். அவர் 117 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியவுடன் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா களமிறங்கித் தன் பங்குக்கு நாலா புறமும் பந்துகளை விரட்டினார். விராட் கோலி 82 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 48 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு விதிக்கப்பட்ட அதிபட்ச ரன் இலக்கு இது என்பதாலும், ஆஸ்திரேலிய அணி கடந்த 20 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டிகளில் சேஸ் செய்யும்போது தோல்வியே கண்டதில்லை என்பதாலும் இந்த இலக்கு இரு தரப்புக்கும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தொடக்கத்தில் சீராக ரன்கள் குவித்தாலும் அவர்களின் ரன் வேகத்தை உயர்த்துவதற்குள் ஆட்டமிழந்து வெளியேறியது ரன் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. டேவிட் வார்னர் 56 ரன்னிலும், ஆரோன் ஃபிஞ்ச் 36 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 69 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி நேரத்தில் தனி ஆளாகப் போராடிய அலெக்ஸ் கேரியின் 55 ரன்கள் (35 பந்து) அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணியால் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கடைசிக் கட்டப் பந்துவீச்சு துல்லியமாகவும் சிக்கனமாகவும் இருந்ததால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக 49ஆவது ஓவரை வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா வெறும் ஒரு ரன்னை மட்டுமே வழங்கினார். அதேபோல, 40ஆவது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஒரே ஓவரில் ஸ்மித், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது. சதம் அடித்த தவனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன.
**
மேலும் படிக்க
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”