ஈரானில் அரசுக்கெதிரான போராட்டங்களால் கடந்த மூன்று நாள்களாக இணையதள வசதி முடக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹரானில் அதிபர் ஹாசன் ரூஹானியின் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் இப்போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அரசுக்கெதிராகப் போராட்டம் வெடித்ததற்கு சமூக வலைதளங்களில் பரவிவரும் உறுதி செய்யப்படாத வீடியோவே காரணமென்று ஈரானிய அரசு கருதுகிறது. இதனால் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக ஈரானிய அரசு கடந்த மூன்று நாள்களாக இணையதள சேவைகளை முடக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள குறிப்பிட்ட வீடியோவில், ஈரானின் மேற்கு நகரங்களான கோரமாபாத், சஞ்சன் மற்றும் அஹ்வாஸ் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் செல்வதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் டேராட் நகர போலீஸாரால் ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற செய்தியும் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளதால் ஈரானிலிருந்து உறுதியான தகவல்கள் வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் அசாரி ஜகிரோமி, அங்குள்ள பிரபல செய்தி சேனலான அமான்ட் நியூஸ் மீது ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிக்கு மக்களைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் கன்சர்வேட்டிவ் மெஹ்ர் என்ற செய்தி நிறுவனம், தெஹ்ரானில் காவல்துறையின் வாகனத்தைப் போராட்டக்காரர்கள் விழ்த்தி, ஈரான் தேசியக்கொடியை எரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
இப்போராட்டங்கள் குறித்து அதிபரின் ஆலோசகரான ஹெசாமொதின் ஹஷீனா, “வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஊழல், தண்ணீர் தட்டுப்பாடு, சமனற்ற விநியோக முறை, சமூக இடைவெளி போன்றவைகளே போராட்டத்துக்குக் காரணம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஹாசன் ரூஹானி அதிபராகப் பதவியேற்ற பிறகே இந்தப் பிரச்சனைகள் அதிகரித்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
“நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என அதிபர் தேர்தலில் ரூஹானியால் தோற்கடிக்கப்பட்ட இப்ராஹிம் ரைசி ட்வீட் செய்துள்ளார்.�,