தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவரையும் மிரட்டியுள்ளனர். மேலும், சோதனை நடந்தபோது விஜயபாஸ்கரின் ஓட்டுநர் உதயகுமார் சில ஆவணங்களைச் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை புலனாய்வு தலைவர் முரளி, அமைச்சர்கள் மீது புகார் தெரிவித்து ஏப்ரல் 12ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் கரண் சின்காவுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், அதிகாரிகளை மிரட்டிய மூன்று அமைச்சர்கள், டெல்லி பிரதிநிதி ஆகியோர் மீது ஆதாரங்களை அழித்தல், அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தார்.
பின்னர், வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 14ஆம் தேதி அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் மீதும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் ஓட்டுநர் உதயகுமார் மீதும் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில். குற்றவியல் நடைமுறை சட்டப்படி ஆதாரங்களை அழித்தல், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் என 183,186,189, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், விரைவில் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆளுங்கட்சியினர் மீது அதிலும் கிளைச் செயலாளராக இருந்தாலும்கூட வழக்குப்பதிவு செய்ய தமிழக போலீஸார் யோசிப்பார்கள், எதிர்தரப்பினரிடம் அவர்களே சமரசமும் பேசுவார்கள். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தால் மட்டுமே வெறுமனே பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்வார்கள். கடந்த 2012ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் கைதுசெய்து வைத்திருந்த அதிமுக-வினரை அமைச்சர் ஒருவர் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அழைத்துச் சென்றதும் தற்போது அதே அமைச்சர்கள் மீது மத்திய அரசின் வருமான வரித்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்திருப்பதும் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையையே காட்டுகிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.�,