பசும்பொன்னில் அதிமுக பேனர் கிழிப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், “நாங்கள் சொல்லி யாரும் பேனரை கிழிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து ஆலோசனை நடத்திய தினகரன் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென முடிவெடுத்தது. ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘மேல்முறையீடு செய்யப்போவதில்லை. இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்த அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், “மேல்முறையீடு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தது உண்மை. மேல்முறையீடு சென்றால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். ஆனால் அப்படி முடிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனெனில் உச்ச நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படியிருக்க எங்களுடைய வழக்கை விரைந்து முடிப்பதற்கு வாய்ப்பில்லை. எனவேதான் மக்கள் மன்றத்தில் தேர்தலை சந்திக்க முடிவெடுத்தோம். இந்த துரோக ஆட்சியில் அவலத்தை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்போம்” என்று விளக்கம் அளித்தார்.
“மேல்முறையீடு சென்றால் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். ஆட்சியாளர்கள் நேரம் நாங்கள் மேல்முறையீடு போகாமல், மக்கள் மன்றத்தில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். அவர்கள் இடைத் தேர்தலை முதலில் நடத்தட்டும்” என்று குறிப்பிட்ட தங்க. தமிழ்ச்செல்வனிடம், தினகரன் மிருக குணம் கொண்டவர் என்று உதயகுமார் கூறியுள்ளாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “ஆர்.கே.நகரில் தினகரனுக்கு வாக்கு கேட்கும்போது இது தெரியவில்லையா. அப்போது வீரன், சூரன் என்றார். அதிகாரம் இருக்கும் வரை தினகரனை விமர்சிப்பார்கள். தொப்பி சின்னத்தின் நின்ற தினகரனுக்கு எப்படி 31 அமைச்சர்களும் வாழ்த்தினார்களோ அதேபோல, அதிகாரம் போனபிறகும் தினகரனை வாழ்த்துவார்கள்” என்று விமர்சித்தார்.
பசும்பொன்னில் பேனர் கிழிப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், “ தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள எங்களுக்கு அளிக்கப்பட்ட நேரமான மதியம் 1 மணிக்கு சென்றோம். அப்போது மக்கள் கூடி எங்களை வரவேற்றனர். பேனர் கிழிக்கப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. அதிமுக பேனரை கிழிக்கச் சொல்வதுதான் எங்களுக்கு வேலையா? நாங்கள் சொல்லி யாரும் பேனரைக் கிழிக்கவில்லை. பேனரை மக்கள் கிழித்திருக்கிறார்கள் என்றால், அரசின் மீது மக்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக பசும்பொன்னில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த முதல்வர், துணை முதல்வரை வரவேற்று அதிமுகவினர் பேனர் வைத்திருந்தனர். தினகரன் அஞ்சலி செலுத்த வந்தபோது, அந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. பேனர்களை கிழித்தது தினகரன் தரப்புதான் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.�,