Lஅஞ்சல் துறை தேர்வுகள் ரத்து!

Published On:

| By Balaji

“ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன” என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையில் நடைபெறும் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் 15 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. ஜூலை 14ஆம் தேதி போஸ்ட் மேன் உள்ளிட்ட தபால் துறையில் காலியாகவுள்ள 1000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், அஞ்சல் துறை தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. தேர்வுக்கு 3 நாட்களே இருந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி வெளியான இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது இந்தியை திணிக்கும் முயற்சி என அறிக்கை வெளியிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், தமிழில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அஞ்சல் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தேர்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், தேர்வு முடிவுகளை வெளியிட மட்டும் தடை விதித்தனர். அதனையடுத்து தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 இடங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இந்த விவகாரம் நேற்று தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அத்தோடு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 16) மாநிலங்களவையில் 14ஆம் தேதி நடந்த அஞ்சல் தேர்வுகளை ரத்துசெய்ய வலியுறுத்தி நவநீதகிருஷ்ணன் தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதுபோலவே திமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்குச் சென்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பியதால், மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அவை 4 முறை முடங்கியது.

மாநிலங்களவை மீண்டும் கூடியதும் தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , “ஜூலை 14ஆம் தேதி நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் வழக்கம் போல அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும்” என்று அறிவித்தார். மேலும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளையும் மதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நவநீதகிருஷ்ணன், திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், டி.ராஜா ஆகிய தமிழக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்தனர். டி.ராஜா பேசும்போது, “தேசிய மொழி, பிராந்திய மொழிகள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்தையும் இந்திய மொழிகளாக பார்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share