வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் குற்றாலம் அருவிகள் வறண்ட நிலையில் காணப்படும் ஆனால் இந்த ஆண்டு பெய்த கோடை மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. குறிப்பாக சீசன் காலத்தில் குற்றாலத்தில் தண்ணீர் நிறைந்திருந்ததால் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், இந்த ஆண்டு கோடை சீசனில், குற்றாலத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்துக்கு அதிகமாக பெய்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நெல்லை மாவட்டத்தின் பாபநாசம் அணையில் தண்ணீர் அளவு 20 அடிக்கு மேல் இருப்பதால் நேற்று முதல் 600 கனஅடி நீர் கார் சாகுபடிக்காக பிறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றி அமைந்துள்ள செங்கோட்டை, பண்பொழி, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயம் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. பொதுவாக கேரளத்தில் தென்மேற்கு பருவகாற்று காலம் தொடங்கினால் தென்காசியிலும் கனமழை பெய்யும் ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கிய பின்னும் இன்னும் மழை பெய்யாததால் தென்காசியில் அருவிகள் வறண்டு உள்ளன. இருப்பினும் இந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.