கூடங்குளம் ‘சைபர்’ தாக்குதல்: ஒப்புக்கொண்ட அணுமின் கழகம்!

Published On:

| By Balaji

நேற்று(அக்டோபர் 29) கூடங்குளம் மின் உற்பத்தி நிலையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பில், அணு மின் நிலைய கட்டுப்பாட்டு அமைப்பு மீது எந்தவொரு தாக்குதலும்(சைபர்) சாத்தியமில்லை” என மறுத்திருந்த நிலையில், இன்று இந்திய அணு மின்சாரக் கழகம் (NPCIL) வெளியிட்ட அறிக்கையில், ’மால்வேர்’ தாக்குதல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில், இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம். இங்கு 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. நேற்று(அக்.29), கூடங்குளம் அணுமின் நிலையம் வடகொரியாவைச் சேர்ந்த ‘லாசரசு’ எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு ‘டி ட்ராக்’(DTrack) என்னும் வைரசால் கூடங்குளத்தின் தகவல்கள் திருடப்பட்டதாக சில தனியார் சைபர் அமைப்புகள் தெரிவித்தன. டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கூடங்குளம் கணிணிகள் ஹேக் செய்யப்பட்டதாக வேகமாக தகவல்கள் பரவின.

குறிப்பாக இணைய பாதுகாப்பு நிபுணர் புக்ராஜ் சிங் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகள் அதிக கவனம் பெற்றன. புக்ராஜ் சிங் தனது பதிவில், “ஊடுருவலை நான் கண்டுபிடிக்கவில்லை, ஒரு 3 வது தரப்பு செய்தது. செப்டம்பர் 4 அன்று தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளருக்கு இது குறித்து அறிவித்தேன் (தேதி முக்கியமானது). 3 வது தரப்பு பின்னர் ஐ.ஓ.சிகளை என்.சி.எஸ்.சி அலுவலகத்துடன் அடுத்த நாட்களில் பகிர்ந்து கொண்டது. காஸ்பர்ஸ்கி மென்பொருள் நிறுவனம் அதை, ‘டி ட்ராக்’ என்று அழைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் அவர்கள், புக்ராஜ் சிங்கின் டிவிட்டர் பதிவைக் குறிப்பிட்டு, “இது மிகவும் தீவிரமானதாகத் தெரிகிறது. நமது அணுசக்தி நிலையங்கள் மீது ஒரு விரோத சக்தியால் சைபர் தாக்குதலை நடத்த முடிந்தால், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான தாக்கங்கள் கற்பனை செய்ய முடியாதவை. அரசாங்கம் எங்களுக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்த ‘ஹேக்கிங்’ கூடங்குளம் மின்நிலையத்தை நிறுத்தும் நோக்கில் அன்றி தொழில்நுட்ப தகவல்களைத் திருடும் நோக்கில் நடந்திருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. சைபர் தாக்குதல்களைப் பொறுத்த வரை நேரடி தாக்குதல்களை விட, தரவுகளே(Data) பிரதானம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதனிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று(அக்.29) விளக்கமளித்திருந்த கூடங்கும் அணு உலை நிர்வாகம், தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை எனக் கூறியிருந்தது.

கூடங்குளம் அணு உலையின் செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்திய அணுசக்தி நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் தனியாக இயங்குபவை. வெளியில் உள்ள வலைபின்னலுடனோ, இணையத்துடனோ இணைக்கப்படாதவை. அணுசக்தி நிலைய கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லாதது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன. அணு உலையை இயக்குவது தொடர்பாகவோ, பாதுகாப்பு தொடர்பாகவோ எவ்வித பிரச்சனையும் இல்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

EIGvD4zUUAIaLO4.jpg

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர் தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லையென நேற்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மும்பையில் உள்ள இந்திய அணு மின்சாரக் கழகம் (NPCIL) இன்று(அக்டோபர் 30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “என்பிசிஐஎல்லின் கம்ப்யூட்டர்களில் ‘மால்வேர்’ கண்டுபிடிக்கப்பட்டது சரிதான். செப்டம்பர் நான்காம் தேதி சிஇஆர்டி (Indian Computer Emergency Response Team) இதனைக் கண்டறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவித்தது,” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்த விவகாரத்தை உடனடியாக அணுசக்தித் துறை நிபுணர்கள் ஆய்வுசெய்தனர். இணையத்துடன் இணைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஒன்றை (அணுமின்நிலைய) பயனாளி ஒருவர் அணு உலையின் நிர்வாக ரீதியான வலைப்பின்னலுடன் இணைத்தார். இந்த நெட்வொர்க்கிற்கும் அணு உலையின் முக்கியப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நெட்வொர்க்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணு உலையில் உள்ள கணிணிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EIHnxm4UcAA19H4.jpg

என்பிசிஐஎல் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில் எந்த அணு உலையின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. சமீபத்திய செய்திக்குறிப்பில், என்.பி.சி.ஐ.எல் மூத்த அதிகாரி ஏ.கே.நேமாவும் இந்த விஷயத்தை செப்டம்பர் 4 அன்று இந்தியக் கணினி அவசரகால பதில் குழு மூலம் தெரிவித்ததாக கூறினார். டி ட்ராக் மால்வேர் தாக்குதலின் செப்டம்பர் 4 ஆம் தேதி தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் அளித்ததாக சைபர் பாதுகாப்பு நிபுணர் புக்ராஜ் சிங் கூறியதையும் இங்கே இணைத்துப் பார்க்கும் போது, இந்திய அணு மின்சாரக் கழகம் (NPCIL) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது கூடங்குளம் அணு உலையை தான் குறிப்பிட்டிருக்கிறது என உறுதிப்படுத்தலாம்.

எனினும், கூடங்குளம் அணுமின் நிலைய கணினி நெட்வொர்க்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share