�குதிரைவாலி மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிக மிகச் சிறியது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்ற மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. கால்சியம், நார்ச்சத்து நிறைந்த குதிரைவாலியில் சமைக்கப்படும் இந்த சாம்பார் சாதம், நீரிழிவாளர்களுக்கும் மிகவும் ஏற்றது.
**என்ன தேவை?**
குதிரைவாலி – 100 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (கீறிக்கொள்ளவும்)
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள்தூள் – சிறிது
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
உப்பு, மல்லித்தழை – தேவையான அளவு
கடுகு, சீரகம் – சிறிதளவு
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
குதிரைவாலியை நான்கு முறை கழுவி, துவரம்பருப்புடன் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின்னர் சாம்பார் பொடி, துவரம்பருப்பு மற்றும் குதிரைவாலியை அதில் சேர்த்து, 800 மில்லி தண்ணீர்விட்டு குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்பு ஒரு சிறிய கடாயை அடுப்பில்வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, குதிரைவாலி சாம்பார் சாதத்தில் கொட்டிக் கிளறவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழையைத் தூவவும். மணமணக்கும் குதிரைவாலி சாம்பார் சாதம் தயார்.
**[நேற்றைய ரெசிப்பி: சாமை கிச்சடி](https://minnambalam.com/public/2021/10/13/1/samai-kichadi)**
.�,