}ராதாபுரம் எம்.எல்.ஏ யார்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

Published On:

| By Balaji

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கின் இறுதி விசாரணை தொடர்பாக வரும் 29ஆம் தேதி முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளையும் 19,20,21 சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

எனினும் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இவ்வழக்கு அக்டோபர் 23, நவம்பர் 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது மறுவாக்கு எண்ணிக்கை முடிவினை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கு இன்று (நவம்பர் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கான தடையை வரும் 29ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து 29ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அப்பாவு மற்றும் இன்பதுரை தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share