மும்பை ஆரே பகுதியில் மேற்கொண்டு மரங்கள் வெட்டத் தடையை நீட்டித்துள்ள உச்ச நீதிமன்றம் மெட்ரோ ரயில் வாகன நிறுத்துமிடம் கட்ட தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அமைக்க அப்பகுதியிலிருந்த மரங்களை வெட்ட கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுடன் மரங்களை வெட்டும் பணியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மேற்கொண்டு மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து மும்பை ஆரே பகுதியில் மேற்கொண்டு மரங்கள் வெட்டப்படாது என்று மெட்ரோ நிர்வாகம் உறுதியளித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா முன்னிலையில் நேற்று (அக்டோபர் 21) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மரங்களை வெட்ட நவம்பர் 15ஆம் தேதிவரை தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேற்கொண்டு மரங்கள் வெட்டத் தடையை நீட்டித்துள்ள உச்ச நீதிமன்றம் , வாகன நிறுத்துமிட கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள எவ்வித தடையும் விதிக்கவில்லை. பணியைத் தொடரலாம் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் புதிதாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்ற அறிக்கை தாக்கல் செய்யவும் மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றத் தடை உத்தரவுக்கு முன்பாகவே ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினால் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2,141 மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 2,185 மரங்கள் இருந்த நிலையில் 97 சதவிகித மரங்கள் ஏற்கனவே வெட்டப்பட்டு விட்டதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.�,