பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்ததால் பத்து வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆசிரியரின் அலட்சியத்தால்தான் மாணவி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு, சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அப்துல் அஜிஸ். இவர் மகள் ஷகாலா (10). சுல்தான் பத்தேரியில் உள்ள சாஜவான் வொக்ஷனல் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை 3.30 மணியளவில் பள்ளி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அவரை பாம்பு கடித்திருக்கிறது. அவர் அமர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறிய துவாரம் உள்ளது. அதிலிருந்து வந்துதான் பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. அவ்விடத்தில் ரத்த துளிகளும் இருந்துள்ளன.
இதுகுறித்து வகுப்பு ஆசிரியரிடம் கூறியதற்கு அவர், மாணவியின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது, அவர்கள் வந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார். மாணவியைப் பாம்பு தீண்டி அரை மணி நேரத்துக்கு பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
உடனடியாகச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் சிறுமியின் பெற்றோர் பள்ளிக்கு வந்துதான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கிருந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிறுமியை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனால் மாணவியைத் தூக்கிக்கொண்டு கோழிக்கோடு நோக்கி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள் அவர் பெற்றோர். ஆனால் சிறுமியின் உடல் கவலைக்கிடமாக இருந்ததால் பாதி வழியிலேயே அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாம்பு கடித்ததை உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளித்திருந்தால் மகளைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாம்பு கடித்து உயிரிழந்த 10 வயது சிறுமியின் குடும்பத்துக்குத் தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வயநாடு எம்.பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இனி இதுபோன்ற நிலை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படாமல் இருக்க கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.�,”