தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.360 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக்கிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பொன்.ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், எந்தவொரு பண்டிகைக்கும் மதுபானக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை என்று இந்த குற்றச்சாட்டை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி மறுத்திருந்தார்.
இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 25) செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தீபாவளியை மது அற்ற தீபாவளியாக மக்கள் கொண்டாட வேண்டும். இதற்காக 26,27,28 ஆகிய மூன்று நாட்களும் தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். இது தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசாகவும், எதிர்கால முன்னேற்றத்திற்கு ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை நிறைவேற்ற வேண்டுமென அவருடைய பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடைத் தேர்தல் குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா என்று எனக்குத் தெரியவில்லை. நான் விசாரித்த வரை அப்படி ஏதும் நடைபெறவில்லை. காங்கிரஸ் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளது. தோற்றதற்கு ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக நாங்கள் கொஞ்சமாக கொடுத்தோம், அதிமுக அதிகமாக கொடுத்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். ஆகவே, காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்கு தொடர வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
�,”