:விடுதலை ஆன அரிசி ராஜா!

Published On:

| By Balaji

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வனபகுதியை விட்டு வெளியேறியபோது பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிருந்து வெளியேறிய அரிசி ராஜா யானை பொள்ளாச்சி வனச்சரகம் நவமலை வனப்பகுதியில் முதியவர், சிறுமி ஆகியோரை தாக்கியது. இதில் இருவருமே உயிரிழந்தனர். மேலும் வனத்துறை ஊழியர் உட்பட சிலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அர்த்தனாரிபாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால், அரிசி ராஜா யானையை பிடிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். கும்கி யானை உதவியுடன் 2019 நவம்பர் 14 ஆம் தேதி அரிசி ராஜா யானைக்கு மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்.

பிடிப்பட்ட அரிசி ராஜா யானையை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு முகாமில் மரக்கூண்டில் (கரால்) அடைத்தனர். அங்கு யானைக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு பிறகு மரக்கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அரிசிராஜா யானை, பாகன்களுக்கு கீழ்படிய மறுத்தது. மேலும், அதன் காலில் உள்ள காயங்கள் காரணமாக திரும்பவும் யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சையும், பயிற்சியும் பெற்று வந்த அரிசி ராஜா யானை, தற்போது பாகன்களின் கட்டளைகளுக்கு கீழ்படிய ஆரம்பித்தது. இதையடுத்து, அரிசிராஜா யானை மரக்கூண்டில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில், பாகன்களுக்கு கீழ்படிந்ததால் அரிசிராஜா யானை மரக்கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது. அதன் புண்களும் சரியாகிவிட்டன. அந்த யானைக்கு இன்னும் சில பயிற்சிகள் கொடுக்க வேண்டி உள்ளது. பாகன்கள், அதற்கு ”முத்து” என்ற பெயரை வைத்துள்ளனர். அதன்படி, யானைக்கு அரிசி ராஜா என்ற பெயரை மாற்றி ’முத்து’ என்ற பெயரே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share