காதலிக்க மறுத்த பெண்: கத்தியை வைத்து மிரட்டியவர் கைது!

Published On:

| By Balaji

சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அங்குள்ள அட்டை கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜனனி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. சிவகுமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக காதலை முறித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவ்வப்போது அப்பெண்ணைச் சந்திக்கும் சிவக்குமார், என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என்று கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரிடம் பேசாமல் அந்த பெண் தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 23) சத்தியமங்கலம்- பண்ணாரி சாலையில் உள்ள குளத்துப்பிரிவு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை சிவக்குமார் சந்தித்துள்ளார். அப்போது காதலிக்க மறுப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவக்குமார், தன்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய். காதலிப்பாயா இல்லையா என பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன் என கழுத்தில் கத்தியை அழுத்திப் பிடித்தவாறு மிரட்டியுள்ளார். இதை கண்ட அருகிலிருந்தவர்கள் பதறிப்போய் சிவகுமாரிடம், அந்த பெண்ணை விட்டுவிடும்படி கேட்டுள்ளனர். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினர்.

யாருடைய பேச்சையும் கேட்காத அந்த நபர், அப்பெண்ணை ஒரு புதர் பகுதிக்கு இழுத்து சென்று தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையே அவ்வழியே வந்த காவலர்கள், அங்கு நின்ற சிவக்குமாரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

அப்போது போலீசார் ஒருவர் திடீரென சிவக்குமார் அருகில் சென்று தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் அவரது தலையில் தாக்கியுள்ளார். உடனே அந்த நபர் கீழே விழ, அப்பெண்ணைப் பொதுமக்கள் காப்பாற்றினர். பின்னர் சிவக்குமாருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது பொதுமக்களிடம் அப்பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக நியாயம் கேட்டுள்ளார் சிவக்குமார்.

இதையடுத்து அங்கிருந்து அவரை அழைத்துச் சென்ற போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிவகுமாரைக் கோபி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பெண்ணுக்குச் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த சைகோ நபரிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய பவானி சாகர் காவல் நிலைய காவலர் குப்புசாமி மற்றும் சிறப்பு இலக்குப்பிரிவு காவலர் மகேஷ்வர மூர்த்தி ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share