கோயம்பேடு சந்தை இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மட்டுமே செயல்படும் என்று கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
கோயம்பேடு சந்தை என்பது மக்கள் அதிகமாக கூடுகின்ற இடம். வியாபாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் இடம். கடந்தாண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர், நேரக் கட்டுப்பாட்டுடன் மார்க்கெட் இயங்க ஆரம்பித்தது.
தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முழு ஊரடங்கடான ஞாயிற்றுக்கிழமையன்று கோயம்பேடு சந்தை இயங்காது. திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் சந்தை வழக்கம்போல் இயங்கும். தினமும் அதிகாலை 1 மணி முதல் மதியம் 1 வரை சந்தை இயங்கும். அனைத்து வியாபாரிகளும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நோய் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காய்கறிகளின் விற்பனை விலை அதிகரிக்காது என்று கோயம்பேடு வியாபாரிகள் உறுதியளித்துள்ளனர்.
**காசிமேடு மீன் மார்க்கெட்**
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக காசிமேடு மீன் சந்தையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை மீன் இறக்கும் தளத்தில் மொத்த வியாபாரிகள் மீன் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை காசிமேடு மீன்பிடி துறைமுக பழைய மீன் விற்கும் இடத்தில் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பொதுமக்களும் வியாபாரிகளும் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,