கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் பரவும் கொரோனா!

Published On:

| By Balaji

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கும் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் புதிதாக 1,250 பேருக்கு உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம், தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு அதிகளவு தொற்று உறுதி செய்யப்பட்டது. வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் இடம் என்பதால், அங்கிருந்து பலருக்கும் தொற்று பரவ தொடங்கியது. இந்த நிலையில், கடந்த மார்ச் இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.

அதற்குப் பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறிச் சந்தையும், மாதவரம் பேருந்து நிலையத்தில் பழக்கடை சந்தையும், வானகரத்தில் பூக்கடை சந்தையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் மீண்டும் கோயம்பேடு சந்தையைத் திறக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தியதால் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி உணவு தானிய அங்காடியும், செப்டம்பர் 29ஆம் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது.

எனினும் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அதில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான 22 நாட்களில் 2800க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. சமீப நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீண்டும் தொற்று பரவியிருப்பது சென்னைவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share