சிலம்பு கூறல்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

காவியம் கடந்த அகவழிப் பார்வை

ஸ்ரீராம் சர்மா

அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தில் இரண்டு பெரிய வணிகர்கள் இருந்தார்கள். ஒருவர் பெயர் மாசாத்துவான், மற்றொருவர் பெயர் மாநாய்க்கன்!

மாசத்துவானுக்குப் பிறந்தப் பேரழகன் கோவலன். மாநாய்க்கனுக்குப் பிறந்த அருந்தவப் புதல்வி கண்ணகி.

செல்வம் செல்வத்தைத் தேடியே கூடும் என்பதற்கேற்ப, நல்ல நாள் பார்த்து, ஊர் கூடி வந்திருந்து வாழ்த்த, கோவலனுக்கும் கண்ணகிக்கும் மணம் முடித்து வைத்தார்கள் பெரியவர்கள்.

கைப்பக்குவம் – கண் பக்குவம் – கருத்துப் பக்குவம் கொண்ட கண்ணகியாளின் வகுத்தலில் இல்லறம் கனஜோராக நடந்துகொண்டிருந்தது.

என்பட்டதோ? யார் கண்பட்டதோ? சோழ மன்னனின் சபையில் நாட்டியமாட வந்த ஆடலழகி மாதவியின் மேல் கோவலனின் மனம் பட்டது.

ஆண் மனம் ஆயிரம் முசுக்களுக்கு சமம் என்றால், பணம் படைத்த ஆணின் மனம் பல்லாயிரத்தையும் கடந்து துள்ளும் அல்லவா?

ஆடல் மாதவியைக் கண்ட மாத்திரத்தில் கண்ணகிக்குத் தீவலம் செய்து சத்தியமடித்துக் கொடுத்ததைச் சுத்தமாக மறந்தான் கோவலன்.

மாதவியே சரண் என்று மனைமாறிப் போனான்.

மாதவியுடனான வாழ்வு படாடோபமாகக் கழியலாயிற்று. தொழில் இரண்டாம்பட்சமாகிப் போக, ஆடல் பாடல் கேளிக்கைகள் மட்டுமே அன்றாடங்களாயின. குந்தித் தின்னக் குன்றும் கரையும் அல்லவா ? கரைந்தது.

காசில்லாதவனுக்கு “இரண்டாம் வீடு” தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடுவது வழமைதானே ?

உணவு நேரத்திலும், இரவு நேரத்திலும் இயல்பாக நிகழும் தாமதம்கூட “உனக்கு இதுபோதும்” என்னும்படி ஆகிவிட்டதோ என்பதாகப் பொருள் இழந்த கோவலனது மனதில் உரு ஏற்றிக்கொண்டிருந்தது.

அப்படித்தான் ஒரு நாள் கானல் வரியைப் பாடிக் காட்டிவிட்டாள் என்று மனம் குமைந்தான் கோவலன்.

இனி மாதவியிடம் காலம் தள்ள முடியாது என்று முடிவெடுத்த கோவலன், கண்ணகியிடமே வந்து சரணடைகிறான்.

வேறு வழியில்லாமல் கோவலனை ஏற்றுக்கொண்டாலும், சினந் தணியாத கண்ணகி…

“இதோ பார், மாதவி என்னும் கொண்டாட்டியிடம் நீ விட்டுவிட்டு வந்தது உன் பணத்தையும் உன் அப்பன் பணத்தையும் மட்டும் அல்ல.

என் அப்பன் எனக்குப் போட்டு அனுப்பி வைத்த பணத்தையும் சேர்த்துத்தான் தொலைத்து வந்திருக்கிறாய்…போ, போய்க் கொண்டுவா அந்தப் பணத்தை…”

“அம்மா, நான் செய்தது தப்புதான். மனம் திருந்திவிட்டேன். இனி, ஓயாது உழைத்து என் வணிகத் திறமையின் மூலமாக இழந்த நம் பணத்தை மீட்டு வைக்கிறேன். ஆனால், வணிகத்துக்குண்டான முதல் பணம்கூட இல்லாத நிலையில் இப்போது நான் நிற்கிறேன்.

மாணிக்கப் பரல்களைக் கொண்ட உன் சிலம்புகளைத் தா. இரண்டும் வேண்டாம் கண்ணகி, ஒற்றைச் சிலம்பையேனும் தா.

அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை முதலாக வைத்து என் வியாபார சாமர்த்தியத்தால் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டுவருகிறேன். இனி என்னை நம்பலாம்!”

கொண்டவன் மறுகி நிற்பதைக் காணப் பொறுக்காத கண்ணகி, “சரி, சரி…முதலில் ஆசுவாசமாக ஓய்வெடுங்கள்” என்றவள்…

சோழ மண்டலத்தின் வாசனைச் சோற்றையும் புகார் நகரத்தில் அன்றன்று வலைப்படும் உயர்வகை மீன்களையும் ஆக்கிப் போட்டுத் தேற்றினாள்.

கோவலன் தன்னை விட்டுப் பிரிந்திருந்த காலகட்டத்தில், அவ்வப்போது ஒரு சமணத் துறவியைச் சென்று வணங்கி தன் மனக் குமுறல்களையெல்லாம் கண்ணீர் மல்கச் சொல்லி ஆறுதல் பெற்று வருவதை வழக்கமாக வைத்திருந்தாள் கண்ணகி.

அவரிடமே மீண்டும் சென்று கோவலன் சிலம்பு கேட்பதைப் பற்றியும், வியாபார நிமித்தம் எங்கு சென்றாலும், தாங்களும் எங்களுடன் வருவதாக இருந்தால் நிம்மதியாக இருக்கும் என்றும் முறையிடுகிறாள்.

“கவலைப்படாதே மகளே…” என்று அவரும் சம்மதம் சொல்லி அனுப்புகிறார்.

கோவலனிடம் கண்ணகி கேட்டாள்…

“சரி, எங்கு சென்று வியாபாரம் செய்யப் போகிறீர்கள்…?”

“மதுரை செல்ல எண்ணுகிறேன்…”

“உம்முடன் நானும் வருவேன்… நம்முடன் சமணத் துறவி ஒருவரும் வருவார். சம்மதமென்றால் கழட்டித் தருவேன் என் காற் சிலம்பை…”

கோவலன் சம்மதிக்க, மூவரும் மதுரை சென்றார்கள்.

அந்த நாளில் மதுரையை ஆண்டுகொண்டிருந்த பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவியிடம் முத்துப் பரல்கள் நிறைந்து குலுங்கிய ஒரு ஜோடிக் காற் சிலம்புகள் இருந்தன.

அதில் ஒற்றைச் சிலம்பு மட்டும் பழுதுபட்டு இருந்தது.

அதனைச் சீர் செய்து தருமாறு தன் கணவன் பாண்டிய மன்னனிடம் நச்சரித்துக்கொண்டே இருந்தாள் ராணி.

அவள் தொல்லை பொறுக்க முடியாமல் அரண்மனைக் கொல்லனான வஞ்சிப் பத்தனை அழைத்த அரசன் “அரசியின் இக்காற்ச் சிலம்பைச் சீரிய வகையில் செப்பனிட்டுத் தருக” என்று ஒப்படைத்து உத்தரவிட்டான்.

கொண்டு சென்ற கொல்லனுக்கு என்ன அவசர செலவோ, அந்த காற் சிலம்பைப் பரபரவெனப் பிரித்து அதனுள் இருந்த விலையுயர்ந்த முத்துப் பரல்களை ரகசியமாக விற்றுவிட்டான்.

நாட்கள் ஓடிக்கொண்டேயிருந்தன.

அரண்மனையிலிருந்து ஆளனுப்பி “எங்கே என் காற் சிலம்பு? எங்கே என் காற் சிலம்பு?” என்று விடாமல் துரத்திக்கொண்டே இருந்தாள் பொழுதுபோகாத மன்னனின் மனைவி.

களவாடி விற்றுவிட்ட காற் சிலம்பை எப்படித் திருப்பித்தர முடியும் கொல்லனால்?

திருதிருவென விழித்துக்கொண்டிருந்த வஞ்சிப் பத்தனின் கண்ணில்… கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப் பிழைக்க சந்தையில் சுற்றிக்கொண்டிருந்த கோவலன் அகப்பட்டுவிட்டான்.

அவனிடம் இருந்த காற்சிலம்பின் வடிவம் அப்படியே அச்சு அசலாக மன்னன் மனைவியின் காற்சிலம்பின் வடிவம் போலவே இருக்க…

அதனை நைச்சியமாகப் பேசி வாங்கி, அரசியிடம் கொடுத்து உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணிய வஞ்சிப்பத்தன்,

கோவலனை அணுகி, சொற்ப விலை ஒன்றைச் சொல்லித் தந்துவிடும்படி கேட்கிறான்.

கோவலனோ, “ஐயா, இதனை முதலாக வைத்துதான் நான் என் வாழ்க்கையையே மீட்டெடுத்தாக வேண்டும். மன்னிக்கவும், தாங்கள் கேட்கும் தரைமட்ட விலைக்குத் தருவதற்கில்லை…” என்றான்.

இரண்டு பேருக்குமே அந்த ஒற்றைச் சிலம்பு உயிர் போராட்டமாக மாறி நிற்க, பேரம் வாக்குவாதமாக மாற, வாக்குவாதம் முற்றிக் கைகலப்பு வரை போக…

“இரு இரு…உன்னிடம் இருந்து அந்தச் சிலம்பை எப்படித் தூக்குவது என்று எனக்குத் தெரியும்…” என்று கறுவியபடி திரும்பிய வஞ்சிப் பத்தன்,

அரண்மனையில் தன்னிடம் கையூட்டுப் பெற்றுக் காலம் தள்ளிக்கொண்டிருந்த சில முக்கியஸ்தர்களிடம் சென்று முதலைக் கண்ணீரோடு முறையிட, அவர்கள் விஷயத்தை மேலும் பூதாகரமாக்கி அரசனிடம் கொண்டு சென்றார்கள்.

“அரசே, நமது ஆஸ்தான கொல்லரிடம் இருந்த ராணியாரின் காற் சிலம்பை, எங்கிருந்தோ வந்து ஊருக்குள் புகுந்த கயவன் ஒருவன் மிரட்டிப் பறித்துக் பிடுங்கிக்கொண்டானாம்.

அது குறித்து ராணியாரிடமோ தங்களிடமோ எடுத்துச் சொல்லும் மனத் துணிவில்லாமல் புழுங்கிக்கொண்டிருக்கிறார் நமது வஞ்சிப் பத்தன். பாவம், அவர் மனமொடிந்து தற்கொலை செய்துகொள்ளுமுன் எப்படியாவது அவரைக் காப்பாற்றியாக வேண்டும்… தங்களால்தான் அது முடியும்…!”

வெகுண்டான் பாண்டிய மன்னன்.

“திருடியது மட்டுமல்லாமல் எனது வஞ்சிப் பத்தனை மரணக் கிணற்றில் தள்ளப் பார்ப்பதா…? பிடித்து வாருங்கள் அந்தக் கயவனை!” என்று உக்கிரமாக ஆணையிட்டான்.

“வாங்குவோர் உண்டா…?” என்று ஒற்றைச் சிலம்போடு மதுரை சந்தையில் சுற்றிக்கொண்டிருந்த அந்த அப்பாவிக் கோவலனைப் பிடித்துக் கொண்டுவந்து அரசவையில் நிறுத்தி ஓய்ந்தார்கள்.

நலிந்த உளவுப் படையைத் தன்னகத்தே கொண்டிருந்த அந்தப் பாண்டிய மன்னன், “கோவலன் கள்வன்” என்னும் பொய்க் குற்றச்சாட்டை நம்பினான்.

கோவலனோ, “மன்னா, நான் அப்பாவி..: என்று கதறினான்..

**வினை விளை காலமாதலின் யாவதும்**

**சினையலர் வேம்பன் தேரானாகி (சிலப்பதிகாரம்)**

உக்கிரம் கொண்டான் மன்னன்.

“அடேய், கள்வா…! தொலைந்து போனது என் தேவியின் ஒற்றைக் காற் சிலம்பு. உன்னிடம் இருப்பதும் ஒற்றைக் காற் சிலம்பே! அதுதான் இது என்னும் என் உளவுப் படையின் கூற்றை நீ மறுக்கிறாயா? ஒன்றும் ஒன்றும் இரண்டு என்னும் எளியக் கணக்குக்கூட எனக்குத் தெரியாது என்கிறாயா? இவனைச் சிரச்சேதம் செய்க!”

கோவலன் பேச்சற்று உறைந்துபோனான்.

வளம்மிக்க குடும்பத்தில் பிறந்து, மனைவியை வஞ்சித்து, தொழிலைத் தூர வைத்து, கொண்ட பொருளை எல்லாம் மாதவியோடிணைந்து இழந்து, மீண்டும் வாழ்வு தேடி அப்பாவி மனைவியோடு வந்த நம்மைக் கள்வன் என்னும் இழிப்பழி சுமத்திக் கொலைக்களத்துக்கு இட்டுச் செல்கிறார்களே என்று எண்ணி எண்ணிக் குமைந்த கோவலன், திகைத்துச் செத்தான்.

சேதியறிந்த கண்ணகி காலவெள்ளமாய்ப் புரண்டு வெகுண்டாள்.

“தன் வாழ்க்கை இப்படியுமா சூறையாடப்படும்…?” என்று மனம்கொதித்த கண்ணகி மதுரை மாநகரின் தெருவில், தலைவிரி கோலமாய் வந்து நின்று கொண்டு உயிர் அலர ஹூங்கரித்தாள் .

“மதுரை வாழ் நல்லோரே கேளுங்கள்… பேரெழில் புகாரின் பெரும் வணிகனாம் மாநாய்க்கனின் செல்வ மகள் நான். அவனது செல்ல மகள் நான்.

நல்லோரே, நல்லோரே… இந்தப் பாழும் மண்ணில் பெண்ணாய்ப் பிறந்து நான்பட்ட பாடனைத்தும் தாளம் பட்டதில்லை. தறி பட்டதில்லை.

முடிவில், இந்த மாமதுரை மண் என்னை வாழ்விக்கும் என்று நம்பினேன். என் கணவன் கோவலனோடு உங்களூருக்குப் பிழைக்க வந்தேன்.

வந்த இடத்தில், ஐயகோ பழிசுமத்திக் கொன்றுவிட்டார்கள் என் கணவனை. கடைசியாக எனக்கென்று இருந்த ஒரே சொத்தான மங்கலத்தையும் பிடுங்கிக்கொண்டான் உங்கள் மன்னன்.

மதுரை மாநகர்ப் பெரியோரே… பெண்ணாய் பிறந்ததை எண்ணி எண்ணி என்னை நானே சபித்துக்கொள்கிறேன். இதோ, பெண்மைக்குக் கலசமாக இருக்கும் எனதிந்த முலையை அறுத்து இந்த மண்ணில் வீசிப் போகிறேன்.

இனி ஒரு அபலைப் பெண்ணுக்கு இதுபோல் நேராமல் காப்பீராக…”

சொன்னது போலவே, செங்குருதி கொப்பளிக்க, அரிவாள் கொண்டு தன் முலையொன்றை அறுத்த கண்ணகி, விண்ணை நோக்கி அதை வீசி எறிய…

அந்தச் சதைக் கோளம் மதுரை மண்ணில் வந்து விழுந்து புரள, கற்புக்குப் பேர் போன மதுரை மண்ணின் தெருப்புழுதி அதைக் காணவிடாமல் வாரி அணைத்து மூடிக்கொண்டது.

கண்ணகியின் ஆவேசத்தைக் கண்டு மனம் பொறுக்க முடியாத மதுரை வாழ் இளைஞர்கள் ஒன்று திரண்டார்கள். அரசனே ஆனாலும் ஒரு பத்தினிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை ஏற்க முடியாது என்று கொதித்தார்கள்.

மன்னனிடம் நியாயம் கேட்க அரண்மனை நோக்கி ஆர்ப்பரித்தபடிப் போனார்கள்.

பாண்டிய மன்னனின் மூளை கெட்ட முன்னணிப் படை அரச விசுவாசம் என்னும் பெயரில், நியாயம் கேட்க வந்த இளைஞர்களைத் தாக்கத் துவங்க, அது பெருங்கலவரமாக மாற, மதுரைவாழ் கோபக்கார இளைஞர்களால் தீக்கிரையாக்கப்பட்டது மதுரையின் அரண்மனை.

நகரெங்கும் பதற்றம் பரவியது. “மாசில்லா மதுரையம்பதிக்கு நீயுமொரு மன்னனா..?” என ஆங்காங்கே தீவைத்தபடியே கோஷமிட்டுப் போனார்கள்

தன் சொந்த மக்களே தனக்கெதிராகத் திரும்பியது கண்ட மன்னன் மாரடைத்து இறந்தான். எல்லாவற்றுக்கும் காரணம் நான்தானே என்று மனம் குமைந்த ராணியும் இறந்தாள்.

மொத்தத்தில், கோவலன் என்னுமொரு பணத்திமிர் பிடித்தவனின் “இரண்டாம் வீட்டு” ஆசை, செல்வந்தர்கள் இருவர் தங்கள் வாழ்நாளில் பாடுபட்டுச் சேர்த்த மொத்தச் சொத்தையும் தீயிடைத் திசுவாய்த் தீய்த்து முடிவில் அவன் உயிரையும் மாய்த்தது.

செழித்து வாழ்ந்திருக்க வேண்டிய மாதரசி கண்ணகியின் மங்கல வாழ்வு பொசுங்கிப்போனது.

மன்னனை இழந்து, மதுரை தீக்கிரையானது.

கண்ணகி, கேரள எல்லையில் வேங்கை மர நிழலில் தங்கி, மறைந்து, தெய்வச் சிலையானாள் என்பார்கள்.

ஆனால், மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென் பகுதியூடாக ஈழத்துக்குச் சென்றுவிட்டதாகவும், ஆங்கே வன்னியில், முல்லைத் தீவிலுள்ள வற்றாப்பளை என்னுமிடத்தில் மனம் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாகவும் உறுதியாக நம்பப்படுகிறது.

கிழக்கில் விரவியிருக்கும் கண்ணகி வழிபாட்டுப் பதிவுகள் அந்த நம்பிக்கைக்கு அட்சர சாட்சியங்களாக நின்றிலங்குகின்றன.

ஆம், இன்று ஈழத்தில் 60க்கும் மேற்பட்ட கண்ணகி ஆலயங்கள் வழிபாட்டில் இருக்கின்றன.

இரண்டாம் நூற்றாண்டின் கயவாகு வேந்தன் காலம் முதல் இன்று வரை ஈழத்துக் கண்ணகி கோயில்களில் கொம்பும் குழலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வைகாசி மாதத்துப் பெரும் பறையொலி ஈழக்காற்றைக் கிழித்துக்கொண்டிருக்கிறது.

“அப்பாவிப் பெண்களின் மங்கலத்தை அழிக்க எவனுக்கடா இங்கே உரிமையுள்ளது…?” என்ற மதுரைக்காரர்களின் கோபத்தை ஈழத்தில் எதிரொலித்து கண்ணகிக்கு “ஹெச்சரீ…க” செய்கிறது.

ஈழத் தமிழ் மண்ணில் கண்ணகி வழிபாடு இன்னமும் தொடர்கிறது.

ஒருமுறையேனும் அங்கு சென்று கண்ணகித் தெய்வத்தை மனம் குளிரக் கண்டுவிட மாட்டோமா என நம்மையெல்லாம் ஏங்கச் செய்கிறது.

ஆச்சரியமாக, சிங்களர்களும்கூட கண்ணகியை, “பத்தினித் தெய்யோ” என்னும் பெயரில் வணங்குகிறார்கள்.

அந்த பக்தி உண்மையான பக்தியாக இருக்குமானால் இன்னமும் அவர்கள் ஈழ மண்ணில் இருக்கத் துணிய மாட்டார்கள்.

கண்டியை ஆண்ட இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629 – 1637) பாடப்பெற்ற “தம்பிலுவில் கண்ணகியம்மன் ஊர்சுற்றுக் காவியம்” இப்படியாக அறுதியிடுகிறது…

**பட்டிநகர் தம்பிலுவில் வீரமுனைக் காரை நகர்;**

**பவிசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளூர்;**

**செட்டிபாளையம் புதுக் குடியிருப்பு;**

**செல்வமுறு மகிழடித் தீவு; முதலைக்குடா;**

**அட்டதிக்கும் புகழும் வந்தாறு மூலை நகர்;**

**மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை**

**மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே!**

நந்திக் கடலோர வற்றாப்பளையில், வயதான பாட்டியின் வடிவில் காட்சி தரும் கண்ணகி அம்மனது திருக்கோயிலில், தாய்த் தெய்வ வழிபாடு நிம்மதியாய் நடந்தேறட்டும்.

ஆங்கே, நித்திய நெய்தீபம் நீதனமாய் நின்றெரிந்து சுடரொளி வீசட்டும்!

வாழிய சிலம்பு!

வாழிய, கண்ணகியாள் குளிர்க் கொற்றம்!!

*

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: [ovmtheatres@gmail.com](mailto:ovmtheatres@gmail.com)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share