இன்றைய ரிலாக்ஸ் டைமுக்கு எதை சாப்பிடுவது என தினம்தினம் புலம்பிக்கொண்டே மெனுவை யோசிப்பவரா நீங்கள்? வழக்கமான மெனுவுக்கு லீவு கொடுத்துவிட்டு, இந்த விடுமுறை நாளில் கோயம்புத்தூர் காளான் மசாலா செய்து சாப்பிட்டு அசத்தலாம்.
**எப்படிச் செய்வது?**
ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். கழுவி, சிறிய துண்டுகளாக்கிய 250 கிராம் காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, கால் கப் மைதா மாவு, மூன்று டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார், ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துப் பிசறவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு டீஸ்பூன் தக்காளி கெட்சப், ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.
**சிறப்பு**
கோயம்புத்தூர் ஸ்பெஷலான இந்த காளான் மசாலா, உடனடி புத்துணர்ச்சி தரும். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
�,