கீழடியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் பிரஹலா சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
கீழடியில் 2015 முதல் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. பழமையான நகர நாகரிகம் கீழடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மூன்று அகழாய்வு பணிகளில் 7,818 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. 4 ஆம் கட்ட அகழாய்வில் 5,820 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அரசியல் தலைவர்களும், வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, கீழடியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கிறதா என்றும், அங்கு சர்வதேச அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? எனவும் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரஹலா சிங் பட்டேல், “ கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை. நினைவுச் சின்ன பகுதியாக அறிவிக்க எந்தவிதமான பரிந்துரைகளும் கிடைக்கவில்லை. அதுபோலவே கீழடி அருகில் மாநில அரசு அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது” என்றும் பதிலளித்தார்.�,