தனது குழந்தைகளைக் கடத்தி அகமதாபாத் ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்தனன் சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கு நேற்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த சாத்வி பிரிண் பிரியாநந்தா மற்றும் பிரியாதத்வ ரிதி கிரண் ஆகியோர் நேற்று (நவம்பர் 20) கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் ஐந்து நாட்கள் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளிடம் வேலை வாங்கி குழந்தைத் தொழிலாளர்களாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நித்யானந்தா ஆசிரமத்தின் மீது எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜனார்தனன் சர்மாவுக்குக் குழந்தைகளைப் பார்க்க நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் அனுமதி மறுப்பதாகவும், குழந்தைகளை மீட்டு காவல் துறை பாதுகாப்பில் வைக்க வேண்டுமெனவும் அவரது தரப்பு வழக்கறிஞர் பிரிதேஷ் ஷா நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் நித்யானந்தா ஆசிரம விவகாரம் பெரிதாக வெடித்துள்ளதை அடுத்து ஆசிரமத்திற்கான குத்தகை உரிமையை அகமதாபாத் கிழக்கு டிபிஎஸ் அதிகாரி ரத்து செய்துள்ளார். மூன்று மாத காலத்திற்குள் ஆசிரமத்தைக் காலி செய்ய நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக பள்ளியின் முதன்மைச் செயலாளர் ரதுல் புரி கூறியுள்ளார். குஜராத் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நித்யானந்தா ஆசிரமத்தின் நடவடிக்கைகளை உற்று நோக்கி வருகின்றன. ஆசிரமத்துக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிதி தொடர்பாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.�,