நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தையும் கல்வித் தரத்தையும் கருத்தில் கொண்டு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்கள் தேர்வு எழுத ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.
இது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அமைச்சருக்கு எதிராக மாணவர்கள் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
நாளை ஜேஇஇ தேர்வு தொடங்க உள்ளது. இந்த சூழலில் 17 வயது மாணவர் ஒருவர் தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதில் நாடு கொடிய வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் இடைவிடாத மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வரவிருக்கும் நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்வது சாத்தியமற்றது.
இதுபோன்ற ஆபத்தான நேரத்தில் தேர்வுகளை நடத்துவது என்பது லட்சக்கணக்கான இளம் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ், வாழ்க்கை உரிமை மற்றும் சுகாதார உரிமையை மீறுவதாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
பல மாநிலங்களில் ஊரடங்கு இன்னும் அமலில் இருக்கிறது. பல்வேறு கட்டுப்பாட்டு மண்டலங்களில் போக்குவரத்து இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 1 முதல் 6 தேதி வரை, செப்டம்பர் 13 ஆகிய தேதிகளில் தேர்வை நடத்துவது என்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
பல மாநிலங்கள் தாமாக முன்வந்து இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்த அல்லது மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளன.
சமீபத்தில் தேசிய தேர்வு முகமை ஹோட்டல் நிர்வாகத்திற்கான NCHM-JEE தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வின்போது சுகாதார நெறிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனால் நோய் தொற்று ஏற்படக்கூடும் என்று மாணவர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் தேர்வு சமயத்தில் மாணவர்கள் 5 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக மாஸ்க் அணிய வேண்டியிருக்கும். அப்போது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், அதாவது ஆக்சிஜன் அளவை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் விளைவாக மூளையின் செயல்பாடு குறைந்து விடும். இதுவும் மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே அவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நீட் மற்றும் ஜே இஇ தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரியும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் 6 மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
**கவிபிரியா**�,