இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்: சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 15 லட்சம் பெண்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 5ஆம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் 16 லட்சம் விவசாயிகளின் ரூ.12 ஆயிரம் கோடி விவசாயக் கடனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

அதற்கான ரசீதும் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை விதி எண்‌110ன்‌ கீழ்‌ அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறு தொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக் காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவிக்குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும், அவர்களின் துயரைத் துடைக்கத் தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்துப் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, ‘தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் ரத்து செய்யப்படும். விவசாயிகள் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share