பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, திரையுலகினர், கிரிக்கெட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கலும், குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் கேரள முதல்வரும், நாகாலாந்து முதல்வரும், ஆபத்து காலத்தில் உதவி செய்த சுஷாந்தின் உதவியை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2018ல் பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பேரிடரைச் சந்தித்தது கேரளாதான். கேரளாவுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டிருந்தார்.
2018 ஆகஸ்ட் 21ஆம் தேதி, கேரளாவைச் சேர்ந்த சுபம்ரஞ்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , சுஷாந்த் சிங் ராஜ்புட் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ”கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவி செய்ய விரும்புகிறேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்வது” என்று கேட்டிருந்தார்.
இதற்கு சுஷாந்த் உங்கள் பெயரில், முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை அனுப்பிவிடுகிறேன். அது மீட்புக் குழு மூலம் மக்களுக்குச் சென்றடையும் என்று பதிலளித்திருந்தார். அதோடு பணம் அனுப்பியது தொடர்பான ஸ்கீரின் ஷாட்டையும் சுஷாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சுஷாந்தின் மரணம் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “இளம் நடிகரின் இறப்பு திரையுலகுக்குப் பேரிழப்பாகும். சுஷாந்த்தை இழந்து வாடும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். கேரள வெள்ளத்தின் போது அவர் அளித்த ஆதரவை என்றும் நினைவில் கொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
கேரளாவுக்கு உதவியது போலவே சுஷாந்த் அதே ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்துக்கும் உதவினார். முதல்வர் நெப்யூ ரியோவை நேரில் சந்தித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.25 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து முதல்வர் நெப்யூ ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மரணம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 2018 ஆம் ஆண்டில் நாகாலாந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டபோது சுஷாந்த் தனிப்பட்ட முறையில் என்னிடம் காசோலையை வழங்கினார். நாகாலாந்து மக்களுக்கு அவர் அளித்த அன்பையும், தாராள பங்களிப்பையும் எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**
�,”