கடைநிலை ஊழியரைக் கவுரவித்த நீதிபதி: நெகிழ்ச்சி தருணம்!

Published On:

| By Balaji

பெங்களூருவில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிக்கபல்லபுராவில் புதிதாக நீதிமன்றம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த சனியன்று (பிப்ரவரி 29)நடைபெற்றது. திறப்பு விழாவுக்காக நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் என முக்கிய நபர்கள் நீதிமன்ற வாசலில் காத்திருந்தனர். அனைவரும் சிறப்பு விருந்தினரை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்தது.

விஐபிக்கள் அனைவரும் அங்கு நின்று கொண்டிருக்க நீண்ட காலமாக நீதிமன்றங்களில் ஊழியராக பணியாற்றி வந்த ஜெயராஜ் திமோதி அழைக்கப்பட்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜெயராஜைக் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபே ஸ்ரீநிவாஸ் ஒகே, ரிப்பனை வெட்டி நீதிமன்றத்தைத் திறந்து வைக்க கூறியுள்ளார்.

இதனால் ஒரு நிமிடம் செய்வதறியாது நின்ற கடைநிலை ஊழியரான ஜெயராஜ், அமைச்சர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலையில் நீதிமன்றத்தைத் திறந்து வைத்தார்.

நீதிமன்றத்தைத் திறக்க தலைமை நீதிபதிதான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் தான் ஒதுங்கி, ஊழியர் ஜெயராஜை ரிப்பன் வெட்ட சொன்னது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அதோடு தலைமை நீதிபதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ”இதுவரை விதிகளைப் பின்பற்றும் நீதிபதிகளையே பார்த்திருக்கிறோம். ஆனால் தலைமை நீதிபதியின் இந்த செயல் மறக்க முடியாதது” என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

20ஆண்டுகளாக நீதித்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் ஜெயராஜ் கூறுகையில், ” இதுகுறித்து எனக்கு முதலில் எந்த தகவலும் கொடுக்கவில்லை, மிகப்பெரிய விழாவாக இது இருந்ததால் பணியாளர் சீருடையில் வந்திருந்தேன். அங்கிருந்த அதிகாரி ஒருவர் என்னை மேடை வரை வரச் சொன்னார். அங்கிருந்த மாவட்ட நீதிபதி பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து தலைமை நீதிபதி கட்டிடத்தைத் திறக்கச் சொன்ன போது ஒரு நிமிடம் தடுமாறினேன். இதனை என்னால் நம்ப முடியவில்லை” என்று மகிழ்ச்சியுடன் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம் கூறியுள்ளார்.

கோலார் மாவட்டம் ஈலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளார். இத்தனை ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியவரைக் கவுரவிக்கும் வகையில் தலைமை நீதிபதி இவ்வாறு செய்துள்ளார்.

**கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share