2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை மீண்டும் மாற்றியமைத்துள்ளார் கமல்ஹாசன்.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், கணிசமான வாக்குகளைப் பெற்றது. பல இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்த முடிவு செய்தார் கமல்ஹாசன்.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி, கட்சியின் கட்டமைப்பு ஆறு பொதுச் செயலாளர்கள் மற்றும் 16 மாநிலச் செயலாளர்கள் கொண்டதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் கட்சியின் கட்டமைப்பை மீண்டும் மாற்றியமைத்துள்ளார் கமல்ஹாசன்.
இதுதொடர்பாக அவர் நேற்று (அக்டோபர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தொடங்கி 14 மாதங்களே ஆன நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளிலும் நின்று பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது நம் அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்தது. அதேநேரம் தமிழக அரசியலை மாற்றியமைக்க வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கான உண்மையான, நேர்மையான அரசு அமைந்திட நாம் இன்னும் வலிமையோடு களத்தில் இறங்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, அருணாச்சலம், மவுரியா, குமரவேல், சவுரிராஜன், உமாதேவி ஆகிய ஐந்து பேர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், அருணாச்சலம் தலைவர் அலுவலக பொதுச் செயலாளர் ஆகியுள்ளார். ஓய்வுபெற்ற ஐஜி மவுரியா வடக்கு – கிழக்கு மண்டலத்தின் பொறுப்பாளராகவும், சி.கே.குமரவேல் தெற்கு – மேற்கு மண்டலங்களின் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்புப் பொதுச் செயலாளராக சவுரிராஜனும், அணிகளின் பொதுச் செயலாளராக உமாதேவியும் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுபோல இயக்குநர் முரளி அப்பாஸ், சுகாசினி கந்தசாமி ஆகியோருக்கு ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பொறுப்பாளராக கிருபாகரனும், தரவுகள் மற்றும் ஆய்வுகள் குறித்த பொறுப்பாளராக காந்தி கண்ணதாசனும், தலைமை அலுவலக மாநிலச் செயலாளராக சத்தியமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளார். கமீலா நாசருக்கு சென்னை மண்டலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
�,”