‘மல்லி மட்டன்’ என்பது செட்டி நாட்டின் ஓர் அசைவக் கறி. திருமணமான மகள், மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு விருந்துக்கு வரும்போது மணக்க மணக்க இந்த தொடுகறியை செய்து மாப்பிள்ளையை மயங்கச் செய்து விடுவார்கள். பச்சை நிறத்தில் கமகமக்கும் வாசனை கொண்ட இந்தத் தொடுகறியை உங்கள் வீட்டிலேயே செய்து அசத்துங்கள். விடுமுறை தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
**என்ன தேவை?**
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
மட்டன் (எலும்பு நீக்கப்பட்டது) – அரை கிலோ
கடலை எண்ணெய் – 250 மில்லி
சீரகம் – கால் டீஸ்பூன்
சோம்பு – காஸ் டீஸ்பூன்
முந்திரித்தூள் – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
கறிவேப்பிலை – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்
பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
மல்லித்தழையை நன்றாக அலசி, சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி சீரகம், சோம்பு, முந்திரித்தூள் மூன்றையும் போட்டுக் கிளறுங்கள். முந்திரி சிவந்ததும் கொத்தமல்லித் தழையைப் போட்டு நன்கு வதக்கியெடுத்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.
மட்டன் மூழ்கும்வரை தண்ணீர்விட்டு வேக வைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், தக்காளியைச் சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி மூன்றையும் போட்டு கிளறுங்கள். பட்டை வாசனை பரவியதும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலையைக் கிளறுங்கள். வெங்காயம் தங்க நிறத்துக்கு மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளியைப் போட்டுக் கிளறுங்கள். தக்காளி வெந்து மசிந்ததும் மட்டனைப் போட்டு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், தேவையான அளவு உப்பு போட்டு, சிறிதளவு தண்ணீர்விட்டு கிளறி சிறிதுநேரம் மூடி வேகவிடுங்கள்.
மட்டனும் மசாலாவும் சேர்ந்து, சுண்டிவந்ததும் அரைத்துவைத்துள்ள கொத்தமல்லித்தழை விழுது போட்டு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடுங்கள். கமகம மல்லி மட்டன் ரெடி.
**சிறப்பு**
இது சுவையான தொடுகறி மட்டுமல்ல… சத்தானதும்கூட. மட்டனால் கிடைக்கும் சத்தும் கொத்தமல்லித்தழையால் கிடைக்கும் சத்தும் சிறிதும் சேதாரமில்லாமல் உடலில் சேரும்.
[நேற்றைய ரெசிப்பி: ஹாலிடே ஸ்பெஷல் – பில்டர் காபி](https://minnambalam.com/k/2019/10/28/1)
�,