உடலில் உள்ள அதிகளவு கொழுப்பைக் குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. கொள்ளுவில் ரசம் செய்வது தனி சுவையைத் தருவதுடன், பருமனைக் குறைக்கும். இதை சூப்பாகவும் அருந்தலாம். மேலும், குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் கொள்ளு ரசம் சிறந்தது.
**
என்ன தேவை?
**
கொள்ளுப்பருப்பு – கால் கப்
புளி – நெல்லியளவு
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் –தலா 2
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
வெல்லத்தூள், நெய் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
வறுத்து அரைக்க:
தனியா, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
சின்ன வெங்காயம் – 4
**
எப்படிச் செய்வது?
**
கொள்ளுப்பருப்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கல் இல்லாமல் களைந்து வேகவிடவும். வெறும் வாணலியில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுக்கவும். ஆறியதும் வேகவைத்த கொள்ளு சிறிதளவு சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மீதமுள்ள கொள்ளு, புளிக்கரைசல், மஞ்சள் தூள், வெல்லம், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போன பின் இறக்கி, மல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.�,”