கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் முட்டை பிரட்டல்!

Published On:

| By Balaji

ராக்கெட் வேகத்தில் உயரும் காய்கறி விலையைக் கேட்கும்போது .. ‘கறிகாய் சமைக்கறதையே மறந்துட வேண்டியதுதான்’ என கவலைக் குரல்கள் கேட்கின்றன. ‘ஆனா, உடம்புக்குத் தேவையான சத்துகள் சரிவர சேராம… புதுவித பிரச்னை வந்துடுமே’ என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்கள் தற்போது பரவலாகக் கிடைக்கும் காலிஃப்ளவருடன் முட்டை சேர்த்து இந்தப் பிரட்டல் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

**என்ன தேவை?**

காலிஃப்ளவர் – மீடியம் சைஸ் காலிஃப்ளவரில் பாதி (சிறிய பூக்களாக நறுக்கவும்)

முட்டை – ஒன்று

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

சீரகம் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

பட்டை – ஒன்று (சிறியது)

அன்னாசி மொட்டு – ஒன்று

கல்பாசி – ஒரு சிட்டிகை அல்லது ஒரு சிறிய இலை

எண்ணெய் – 6 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க:

தேங்காய் – 2 இன்ச் நீளத் துண்டு

பட்டை – ஒன்று (சிறியது)

தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 5 பல்

**எப்படிச் செய்வது?**

மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். முட்டையை உடைத்து ஊற்றிச் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, நீரை வடிகட்டி, பூக்களைத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, சீரகம், அன்னாசி மொட்டு, கல்பாசி சேர்த்து வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு காலிஃப்ளவர் பூக்கள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு ஓரமாக வாணலியில் ஒதுக்கிவிட்டு, நடுவில் சிறிதளவு எண்ணெய்விட்டு உடைத்த முட்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். முட்டை முக்கால்வாசி வெந்ததும் காலிஃப்ளவர் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

இது, பொடிமாஸ் போல இருக்கும். முட்டை இல்லாமலும் செய்யலாம்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share