இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜக பெண் எம்பி சோனல் மான்சிங், சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல துறையைச் சார்ந்த பெண்களும் இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் இன்று அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஆந்திர மாநிலத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு செல்போன் வாங்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்த சூழலில் மாநிலங்களவையில் இன்று காலை பேசிய பாஜக பெண் எம்பி,சோனல் மான்சிங் பெண்கள் தினம் போன்று சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இது மாநிலங்களவை உறுப்பினர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில், நாங்கள் சமத்துவத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்று அசத்தலாக பதிலளித்தார் சோனல் மான்சிங்.
ஏற்கனவே ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையும் ஐநா அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,