தனது எதிர்கால கல்வி செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக செலவிட்ட மதுரை மாணவி நேத்ராவின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனது எதிர்காலத்துக்காகச் சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயைத் தனது தந்தை உதவியுடன் மதுரையில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து உதவினார் மதுரை மாணவி நேத்ரா.
நேத்ரா மற்றும் அவரது தந்தை மோகனின் உதவி மனப்பான்மையைப் பாராட்டி மே 31ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐ.நா. அவை நேத்ராவை ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவித்து, ஒரு லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப்பும் வழங்கியது.
இதுகுறித்து [மின்னம்பலத்திடம்](https://minnambalam.com/public/2020/06/05/29/madurai-nethra-announced-as-un-peace-ambassador) நேத்ரா கூறுகையில், உலக அளவில் வறுமையில் வாடும் மக்களின் குரலாய் ஐநா அவையில் பேசுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேத்ராவின் எதிர்கால கல்விச் செலவை முழுவதுமாக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலடை பகுதியில் முடித்திருத்தம் தொழில் செய்து வரும் மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் படிப்புக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தைத் தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கச் செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்குச் சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்குச் செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
**-கவிபிரியா**�,