கேரளாவின் உணவு வரலாற்றில் மசாலாப் பொருட்கள் எப்போதுமே முக்கிய இடம் பிடிக்கும். அதற்கான ஓர் உதாரணம் மிளகுத்தூள் சேர்த்து செய்யப்படும் இந்த சேன மெழுக்குவரட்டி. பார்க்க அசைவ உணவு போல காட்சியளிக்கும் இது, அசைவ உணவையும் மிஞ்சும் சுவையுடையது.
**என்ன தேவை?**
சேனைக்கிழங்கு – அரை கிலோ (தோல் சீவி, ஒரு இன்ச் கனத்துக்கு சதுரத் துண்டுகளாக்கவும்)
சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 6 பல்
கடுகு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
சின்ன வெங்காயத்துடன் பூண்டு, சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். சேனைக்கிழங்குத் துண்டுகளை ஆவியில் முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு சேனைக்கிழங்கை சேர்த்து, மிதமான தீயில் நன்றாக ரோஸ்ட் செய்து எடுக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: கேரள ஸ்பெஷல் – இஞ்சிப்புளி!](https://minnambalam.com/k/2020/08/18/3)�,