‘கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள எல்லைக்குள் வரலாம்’ என்று தமிழக தோட்டத் தொழிலாளர்களை அனுமதிக்க மறுத்த கேரள போலீஸாரை எதிர்த்து கம்பம்மெட்டில் திடீர் சாலை மறியல் நடந்தது.
தேனி மாவட்ட எல்லையான கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழகத் தொழிலாளர்கள் ஆறு மாத கால இ-பாஸ் பெற்று, கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். தற்போது இ-பாஸுடன் கொரோனா பரிசோதனை சான்றிதழும் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கூறி, தமிழகத் தோட்டத் தொழிலாளர்களை, கேரள போலீஸார் திருப்பி அனுப்பினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், கம்பம்மெட்டு சாலை சிலுவைக்கோவில் அருகே பைபாஸ் ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கம்பம் வடக்கு போலீஸார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கேரள போலீஸாருடன் பேசினர். இதில் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கேரள போலீஸார் திட்டவட்டமாகக் கூறி நேற்று மட்டும் அனுமதி கொடுத்தனர்.
இது குறித்து தோட்டத் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. டெஸ்ட் எடுத்தால் மூன்று நாட்கள் கழித்துதான் ரிசல்ட் வருகிறது. ரிசல்ட் வரும் வரை நாங்கள் வேலைக்கு செல்ல முடியாது. எனவே இந்த பிரச்சினை குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்’’ என்றனர்.
**-ராஜ்**
.�,