கேரள தங்கக் கடத்தல்: என்.ஐ.ஏ. விசாரணைக்கு அனுமதி!

Published On:

| By Balaji

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கை மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)யிடம் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு. இதுவரை பயங்கரவாத, குற்றவியல் வழக்குகளையே விசாரித்து வந்த என்.ஐ.ஏ.விடம் தங்கக் கடத்தல் வழக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தது. இந்தக் கடத்தலில் ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கில் அமீரக தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமாரும், அவரது கூட்டாளியின் மனைவியும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண்ணும் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுகிறார்கள். இந்த கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான விசாரணை வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, வெளியுறவு அமைச்சகமும் ஜூலை 9 ஆம் தேதி இந்த வழக்கைப் பற்றி பதிலளித்தது. வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சகம் தகவல் கொடுத்துள்ளது. இந்த சரக்குகளை ஆய்வு செய்வதில் சுங்க அதிகாரிகளுக்கு ஐக்கிய அரபு தூதரகம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது. இந்த விவகாரம் மேலும் விசாரணையில் உள்ளது”என்றார்.

அதேநேரம், “திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்க என்ஐஏவை உள்துறை அமைச்சகம் அனுமதிக்கிறது. ஏனெனில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தக் கடத்தல் நடவடிக்கை தேசிய பாதுகாப்பின் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஜூலை 9 ஆம் தேதி மாலை வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share