கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. அங்கு கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது.
கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளை கும்பிட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.
இந்த ஆலயத்தை அனிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தைத் சிலையாக நிறுவி அதற்கு பூஜை செய்து வருகிறார்.
இது குறித்து பேசியுள்ள அனிலன், “வைரஸ் நோய்களை கடவுளாக பாவிக்கும் தன்மை இந்தியாவில் உண்டு. சிக்கன் பாக்ஸ் நோயை அம்மை நோய் எனவும் அம்மை போட்டிருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் கூறுகிறார்கள். அம்மனுக்குக் கோபம் வந்தால் அதுபோன்ற நோய் வரும் எனக் கூறுவார்கள்.
கேரளத்தில் சிக்கன் பாக்ஸ் நோயை வசூரி என அழைப்பார்கள். கொல்லத்தில்கூட பல ஆலயங்களில் வசூரிக்கு எனத் தனிப் பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்துவருகிறது. கொரோனா தேவியை வழிபட வேண்டும் என நான் யாரையும் அழைக்கவில்லை. என் வீட்டில் நான் வழிபடுவது எனது தனிப்பட்ட நம்பிக்கை. இங்கு வழிபாடு செய்ய வருபவர்கள் காணிக்கை வழங்க வேண்டும் எனவும் நான் கேட்கவில்லை. எனது வருமானத்துக்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்.
இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் உள்ளனர். அதில் கொரோனா தேவி என்ற கடவுளை வணங்குவதில் தவறு இல்லை. நாம் பாம்பை வழிபடுகிறோம். யானை, எலி உள்ளிட்டவற்றை வழிபடுகிறோம். அதன் ஒரு பகுதியாக கொரோனா தேவியை வழிபடுகிறேன் என்றவர் சூடம் ஏற்றிக் கொரோனா தேவியாக அவர் பாவிக்கும் ரூபத்துக்கு ஆரத்தி எடுக்கிறார்.
கொரோனா தேவி வழிபாடு காரணமாக உங்களை மனநலம் சரியில்லாதவர் எனக் கூறுகிறார்களே என அவரிடம் கேட்டதற்குக் கோபப்படாமல் பதில் சொல்கிறார். “இப்போது அல்ல எப்போதே என்னை அப்படி சொல்லிவிட்டார்கள். இங்கு மனநலத்துடன் இருப்பவர்கள் யார் என மனநல மருத்துவர்கள் அடையாளம் காட்டட்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வழிபாட்டு முறைக்கான உரிமை உள்ளது. இது எனது வழிபாட்டு முறை” என்கிறார்.
**-ராஜ்**�,”