கேரளாவில், சாமி ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனை வளாகத்தில் வழியக்கோயிக்கல் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்ப ஜெயந்தி விழா மாசி உத்திரம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற பந்தளம் அரண்மனை வளாகத்தில் ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்த புராண வரலாறு உண்டு. பந்தள மன்னர் ராஜ சேகரனுக்கு, இளமை பருவத்தில் மணிகண்டனாக வாழ்ந்த ஐயப்பன், பின்னர் சபரிமலையில் சன்னியாசியாக தவம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சபரிமலை உட்பட கேரளா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு ஐயப்பன் கோயில்களில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் ஐயப்ப ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
ஆனால், பந்தள அரண்மனையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரத்தன்று ஐயப்ப ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் பந்தளம் வழியக்கோயிக்கல் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஐயப்பஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது.
பந்தளம் வழியக்கோயில் தர்மசாஸ்தா ஆலயம் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தர்மசாஸ்தாவுக்கு களபாபிஷேகம் அஷ்டாபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது.
சபரிமலை ஐயப்பனுக்கு உரிய தங்க திருபாவரணங்கள் பந்தள அரண்மனை நிர்வாகத்திடமே உள்ளது. இந்த மகர ஜோதி திருபாவரணங்கள் பந்தளம் தர்மசாஸ்தாவுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை வழிபாடும் மாலையில் யானை மீது அமர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
இந்த ஆண்டு சபரிமலையில் கடுமையான கொரோனா கட்டுபாட்டால் சபரிமலை செல்லமுடியாத பக்தர்கள் பந்தளத்தில் வழிபாடு நடத்தி சென்றனர்.
**- சக்தி பரமசிவன்**
�,”