_கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகுக் கூழ்!

Published On:

| By Balaji

ஆயிரமாயிரம் படையல்கள் போட்டாலும் அம்மனுக்கு ஏற்றது கூழ்தான். கூழ் காய்ச்சிப் படைத்து ஏழைகளுக்கு ஊற்றினால் ஏழேழு ஜென்ம பாவங்களையும் நீக்கி, தன் பிள்ளைகளைக் காப்பாள் அந்த மாரி என்பது எளிய மக்களின் நம்பிக்கை. தமிழர்களின் தொன்மையான உணவான கேழ்வரகுக் கூழ் உடலுக்கு வலிமையையும் குளிர்ச்சியையும் அளிக்கக் கூடியது. ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைதோறும் அம்மனுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றுவது வழக்கம். அம்மன் ஆலயங்களிலும் இந்த விழா விமரிசையாக நடைபெறும். பெரியபாளையம் பவானியம்மன் ஆலயத்தில் ஆடி, ஆவணி தாண்டி 10 வாரங்கள் வரை கூழ் ஊற்றி வழிபடும் வழக்கமுண்டு.

**என்ன தேவை?**

கேழ்வரகு மாவு – ஒரு கிலோ

பச்சரிசி நொய் – 300 கிராம்

சின்ன வெங்காயம் – 10 (பெரியது, நறுக்கிக்கொள்ளவும்)

தயிர் – 2 கப்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாகக் கரைத்து முதல் நாள் இரவே புளிக்கவைக்கவும். மறுநாள் பானையை அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டுக் கொதிக்க வைக்கவும். பச்சரிசி நொய்யைக் கழுவி களைந்து, கொதித்த நீரில் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும், புளித்த கேழ்வரகு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து, மத்தின் பின்புறத்தால் அடிப்பிடிக்காமல் கிளறிக் கலந்துவிடவும்.

மாவும் அரிசியும் கலந்து கெட்டியாகும். அப்போது கையில் தண்ணீர் தொட்டு, வெந்துவிட்டதா என்று பார்க்கவும். மாவு கையில் ஒட்டாமல் வந்தால் அதுவே பதம். அப்போது இறக்கிவிடவும்.

இந்தக் கெட்டியான களியை 6 மணி நேரம் புளிக்கவைத்துப் பயன்படுத்த வேண்டும் (அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலேயே புளிக்கவிடவும்). இதில் வேண்டிய அளவு களியை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர்விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் குளுமையான கூழ் செய்து அம்மனுக்குப் படைக்கலாம். இத்துடன் துள்ளு மாவு, முருங்கைக்கீரை பிரட்டல், கருவாட்டுக் குழம்பு வைத்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றலாம். இதையே ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது என்பார்கள்.

[நேற்றைய ரெசிப்பி: ஔவையார் கொழுக்கட்டை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/07/20/1/avvayaiyar-kolukattai)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share