கமல்ஹாசன் மீது ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ. ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம், ஊர்வசி, மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோர் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரித்தார். திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி படத்தை வெளியிட ஒப்பந்தமானது.
ஆனால், உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். அப்போது ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா, உத்தம வில்லன் பட வெளியீட்டிற்கு உதவ முன்வந்தார். அதன்படி, கமல்ஹாசன் ஸ்டூடியோ கிரீனுக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பது அல்லது உத்தம வில்லன் வெளியீட்டிற்குப் பின் பணத்தை திருப்பிக் கொடுப்பது என ரூ.10 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம் வாங்கியுள்ளார் கமல்.
உத்தம வில்லனும் வெளியாகியது. ஆனால், படம் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்தும், இந்தப் பணத்துக்கு கமல் எந்தவொரு பதிலுமே கூறவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று(செப்டம்பர் 25) அளித்துள்ளார். அதில் தனக்கு கொடுக்க வேண்டிய கால்ஷீட் அல்லது பணம் குறித்து கமல் இதுவரை எந்தவொரு பதிலுமே அளிக்காமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு இந்தப் புகார் தொடர்பாக கமல் மற்றும் ஞானவேல்ராஜா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.�,