தோண்டத் தோண்ட, ஆச்சரியங்களை அள்ளித் தந்துகொண்டிருக்கிறது கீழடி. இந்திய வரலாற்றைப் பல கேள்விகளுக்கு உட்படுத்தி கீழடியில் அகழ்வாராய்ச்சி இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழ் மொழியின் வரலாறு, நாம் எண்ணியதை விடவும் பெரும் சிறப்புகளை உடையது என்பதும் தெளிவாகத் தெரியக்கிடைக்கிறது. சிந்து சமவெளியில், எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிந்திருந்தால், இத்தனை விடுகதைகளுக்கும் விடை கிடைத்திருக்கும். ஆனால் அந்த சிறப்பு சுமேரியர்களின் எழுத்துக்குக் கிடைத்திருக்கிறது. இருமொழிப்பொறிப்பு அங்கு கிடைத்ததால் அந்த கல்வெட்டுக்களில் எழுதப்பட்டிருப்பது, என்னவென்பதைக் கண்டறிய முடிந்தது. ஆனால் சிந்து சமவெளியில் அத்தகையதொரு வாய்ப்பு அமையவில்லை. அதனால் அந்த எழுத்துக்கள் குறித்தும், அந்த மொழி குறித்தும் தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்தடுத்த ஆராய்ச்சிகளின் முடிவில், அசோகர் காலத்தில் வந்த பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வட இந்தியாவில் இருந்து நமக்குக் கிடைத்தது. இதற்கு இடையில் தான் ‘ஐராவதம் மகாதேவன்’ அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பான தொல்தமிழ் கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றன. அதற்கு அவர் ‘தமிழ் பிராமி’ என்று பெயரளித்தார்.
இவற்றை ஏன் தமிழ் பிராமி என்று கூற வேண்டும், தமிழி என்றே பெயரிட்டு அழைக்கலாம் என்பதான ஒரு கருத்து தற்போது எழுந்துள்ளது. சிந்து சமவெளியில் காணப்பட்டது போன்ற எழுத்துக்களும், கிறுக்கல்களும் கொண்ட பானை ஓடுகள் தமிழகத்திலும் காணக் கிடைத்துள்ளன. அத்தகைய கிறுக்கல்களுக்கு ‘கிராஃபிட்டி மார்க்கர்ஸ்’ என்று பெயர்.
தற்போது, நம் தமிழகத்தின் கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் அத்தகைய எழுத்துக்களும் கிறுக்கல்களும் நமக்கு கிடைத்துள்ளது. அத்தகைய பானை ஓடுகள் குறித்து சிந்து சமவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டுத்தெரிந்த அரிய தகவல்களை நமது மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியின் வாசக நேயர்களுக்காகத் தருகிறோம்.
வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.