yஒரே நாடு ஒரே ரேஷன்: சாதகங்களும் சங்கடங்களும்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 2.9 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டு குடும்ப உறுப்பினர்களுக்கு 35,082 கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சராசரியாக மாதம்தோறும் 3.30 லட்சம் டன் அரிசியும், கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை தலா 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டன் வரை விநியோகம் செய்யப்படுவதாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தும் வகையில், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஏற்படும் ஊழல் மற்றும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2013ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதாவது ஒரு மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்துக்கு வேலைக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது. தற்போது வரை ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் அமலில் இருக்கிறது. அப்படியானால் இந்த 4 மாநிலத்தைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள், 4 மாநிலங்களில் உள்ள எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வரும் மாநிலங்களில் உள்ள பொது விநியோகத் திட்ட பயனாளர்களின் தொகுப்பு மையப்படுத்தப்பட்ட சர்வரில் இணைக்கப்படும். இதன்மூலம் ஒரு பயனாளர் இரு இடத்தில் ரேஷன் அட்டை வைத்திருந்தால் அது கண்டுபிடிக்கப்படும்.

இந்த திட்டத்துக்காக ஆதார் அட்டையை மையமாகக் கொண்டு ஸ்மார்ட் கார்டு ஒன்று வழங்கப்படும். இதில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை பதிவு செய்யப்பட்டு, பயோமெட்ரிக் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப தலைவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் யார் வந்து கை ரேகையை பதிவு செய்தாலும் உணவு பொருட்களை வாங்க முடியும்.

இந்நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக திருவாரூர், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 32 மாவட்டங்களில், கை ரேகையை பதிவு செய்யும் பணிகள் முழுமையாக நடந்து முடிந்துவிட்டதாகவும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்ட பணிகளுக்காக, பாய்ண்ட் ஆப் ஸ்கேல் இயந்திரம் உட்பட நியாய விலை கடைகளில் உரிய வசதிகளை மேம்படுத்த 38.50 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்த சூழலில், இன்று (அக்டோபர் 1) தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை 32 மாவட்டங்களில் முதல்வர் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மீதமுள்ள 6 மாவட்டங்களில் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி ஸ்மார்ட் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாய விலை கடைகளிலும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

முன்னதாக, வயதானவர்கள், ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாதவர்கள், ரேஷன் பொருட்கள் வழங்கும் தினமன்று அவரச வேலைக்காக வெளியூர் செல்லக் கூடியவர்கள் இதுவரை தெரிந்தவர்களிடம் கொடுத்து அனுப்பி பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது கைரேகை கட்டாயம் என்ற நிலையில் இதுபோன்ற சூழலில் எப்படி வாங்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நியாவிலை கடை பணியாளர் சங்கத்தின், பொதுச் செயலாளர் ஜெயசந்திர ராஜாவிடம் விசாரித்ததில், பொருட்கள் வாங்க வர முடியாதவர்கள் ரேஷன் அட்டை பதிவின் போது கொடுக்கப்பட்ட செல்போன் நம்பரை கொடுத்து அனுப்பினால், அதற்கு வரும் ஓடிபியை பதிவு செய்துகொண்டு ரேஷன் பொருட்கள் வழங்க முடியும் என்றார். ஒருவேளை செல்போன் எண்ணும் இல்லை என்றால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிவித்தார். மேலும், தற்போதைய சூழ்நிலையில், கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்குவதன் மூலம் கொரோனா பரவவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆதார் கார்டுடன் பதிவு செய்த கருவிழியை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

அதுபோன்று தமிழகத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் 5 லட்சம் கார்டுகள் உள்ளது. இந்த கார்டுகளை அந்தந்த பகுதிகளில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், “ரேஷன் பொருட்களைப் பெறமுடியவில்லை என்ற நிலை இனி இருக்காது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டதோடு, கடை ஒன்றிற்கு 5 சதவிகித பொருட்கள் கூடுதலாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு தமிழகத்தின் சிறப்பு திட்டங்கள் எல்லாம் கிடையாது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு எந்த விலையை அவர்களுக்கு நிர்ணயித்திருக்கிறதோ அதை கொடுத்து அவர்கள் பெற்றுகொள்ளலாம். பயோமெட்ரிக் என்பது அனைவருக்கும் கட்டாயம். அதே சமயத்தில் பயோமெட்ரிக்கை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில் என்னென்ன செய்யலாம் என்று முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

*-கவிபிரியா*

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share