தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை மற்றும் கற்பித்தல் திறனைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து, 2006இல் பணி வரன்முறை செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த 2004ஆம் ஆண்டிலிருந்து பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்கக்கோரி முத்து அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தார்.அவரது உத்தரவை ரத்துசெய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக்கோரி முத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனுவை நேற்று(பிப்ரவரி 18) விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தொழில் புனிதமானது. ஆசிரியர்கள் நல்ல நடத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தற்போது ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வருகின்றன. கொரோனா காலத்தில் நான்கு கோடி பேர் வேலையிழந்துள்ளனர். ஆனாலும் ஆசிரியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்கப்பட்டது. மக்கள் பணத்தை பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆசிரியர்களின் நடத்தைகளைப் பள்ளிக்கு உள்ளேயும், பள்ளிக்கு வெளியேயும் உரிய அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
எனவே, தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
**-வினிதா**