சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு வேக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் இன்று (ஜூன் 15) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துவிட்டதாகவும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் பரிந்துரைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மருத்துவக் குழுவினரின் பரிந்துரைகள் தொடர்பாகவும், ஊரடங்கை கடுமையாக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 19 முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
மார்ச் 25ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதாகத் தெரிவித்த முதல்வர், “சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று கொரோனா தடுப்புப் பணிகளை விவரித்தார்.
மேலும், “சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
**எழில்**
�,”