Hவிவசாயியாக மாறிய முதல்வர்!

Published On:

| By Balaji

”தான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்” என்று ஒவ்வொரு மேடையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதற்கேற்ற வகையில் இன்று விவசாயிகளுடன் விவசாயியாக வயலில் இறங்கி நாற்று நட்டது தமிழக விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்மை காலமாக தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ‘நான் விவசாயியின் மகன்’, ’விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். கடந்த பொங்கல் பண்டிகையின் போது சிலுவம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை பார்த்த வீடியோவும் புகைப்படங்களும் வெளியானது, இதற்காக முதல்வருக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தன்னை விவசாயி என்று ஒவ்வொரு மேடையிலும் முதல்வர் கூறி வருவதை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். விவசாயி என்றால் கையில் மண் இருக்க வேண்டும், ஆனால் அவரது கையில் ஊழல்தான் இருக்கிறது. அவர் ஒரு விசித்திர விவசாயி என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, விவசாயம் என்றால் என்னவென்றே ஸ்டாலினுக்குத் தெரியாது. அவர் விவசாயிகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இதனிடையே காவேரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்தார். இது டெல்டா விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றது. இதற்காகத் திருவாரூர் விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று (மார்ச் 7) எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்காகச் சென்றார். இன்று காலை காரில் சென்றுகொண்டிருக்கும் போது திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் என்ற கிராமத்தில் வயலில் நாற்று நடும் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த முதல்வர் அங்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அவர்களுடன் தனது விவசாயப் பணிகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இதனிடையே வேட்டியை மடித்துக் கொண்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக வயலில் இறங்கி விவசாயிகளுடன் விவசாயியாக நாற்று நடும் பணியில் ஈடுபட்டார்.

முதல்வரின் செயலை கைதட்டி வரவேற்ற அங்கிருந்த பெண்களும், விவசாயிகளும் முதல்வர் நாற்று நடுவதைக் கண்டு பூரித்து போயினர். அவர்களிடம் இப்போதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டுதான் இருக்கிறேன். அதிமுக அரசு விவசாயிகளுக்கான அரசு எனக் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முதல்வர் வயலில் இறங்கி நாற்று நடுவது குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

**கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share