சிப்ஸ், பப்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் சத்தான உணவுகளைச் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அதற்காக நாம் பல முயற்சிகளைச் செய்வோம். அது பலனளிக்காதபோது சத்து மிகுந்த கவுனி அரிசியைக்கொண்டு இனிப்பான இந்த உருண்டையைச் செய்து கொடுக்கலாம். இதை குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
**எப்படிச் செய்வது?**
250 கிராம் கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும். ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் 100 கிராம் தேங்காய்த்துருவல், தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.
**சிறப்பு**
கவுனி அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.�,