பிகிலுக்கு பிறகு மீண்டும் ‘ஃபுட் பால்’ எடுத்த கதிர்

Published On:

| By Balaji

பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரராக கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இவர் நாயகனாக நடித்துள்ள ‘ஜடா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மத யானை கூட்டம் படம் மூலம் அறிமுகமான இளம் கதாநாயகன் கதிர். இதன் பின்னர் கிருமி, விக்ரம் வேதா என தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இவர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான, பரியேறும் பெருமாள் திரைப்படம் கதிரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில் வெளியான, பிகில் படத்தில் இவர் நடித்த பாத்திரம் பேசப்பட்டது.

இந்நிலையில், கதிர் நாயகனாக நடித்த ஜடா திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று(நவம்பர் 15) வெளியாகியது. முழுக்க வடசென்னையை பின்புலமாகக் கொண்டு கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது ஜடா. நாயகன் கதிர் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தை தவிர்த்து வேறு எதுவுமே தெரியாது என துவங்குகிறது டிரெய்லர் காட்சிகள்.

அதன் மூலமே, கால்பந்து தான் அனைத்தையும்(திரைக்கதை, கதைமாந்தர்கள் வாழ்வு) தீர்மாணிக்கும் சக்தி என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. சிறு வயதில் இருந்து விளையாட்டு வீரனாக வளரும் கதிர், பத்து வருடங்களுக்கு பின், தன் ஏரியாவில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டியில் முக்கிய திருப்பமாக அமைகிறார்.

விளையாட்டு, நிலப்பரப்பின் வாழ்வியல், காதல், டிரெய்லர் முடிவில் வரும் ‘ட்விஸ்ட்’ என எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது டிரெய்லர். முன்னெப்போதும் இல்லாததை விட, ‘ஸ்போர்ட்ஸ் சினிமா’க்கள் தமிழில் தற்போது அதிகரித்து வரும் நிலையில், ‘ஜடா’ தன்னை எங்கே வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதில் தான் இப்படத்தின் வெற்றி இருக்கிறது.

குமரன் இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகி ரோஷினி பிரகாஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். தி போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்திருக்கிறார். டிசம்பர் 6 ஆம் தேதி ஜடா வெளியாகவுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share