சென்னை காசிமேட்டில் அமைந்துள்ள கடல் உணவு வியாபாரிகள் நல சங்கம் எதிரே, தரையெங்கும் தெறித்திருந்த ரத்தத்தின் பின்னால் ஒரு கொடூரமும் கொலையும் மறைந்திருந்தது.
சாலை ஓரமாக நின்று சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீக்காற்றாய் பரவியது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த 28 வயதாகும் திவாகரன் என்பவர் பிப்ரவரி 26ஆம் தேதி இரவு எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையும் செய்துவிட்டு நாங்கள்தான் கொன்றோம் என்று 19 மற்றும் 20 வயதுடைய ஆறு இளைஞர்கள் அடுத்த நாள் காவல் நிலையத்திலும் சரணடைந்துள்ளனர். லோகேஷ், விமல், ஆண்டனி, ஸ்டீபன், சரத், வேல்முருகன் ஆகிய இந்த ஆறு பேரும் மற்ற இருவருடனும் இணைந்து திவாகரனை எதற்குக் கொலை செய்தார்கள், இந்தக் கொடூரம் எப்படி நடந்தது என்ற பதைபதைக்கும் பின்னணியைப் பார்ப்போம்.
கடந்த புதன்கிழமை (26-02-2020) இரவு சாலை ஓரமாக நின்றிருந்த திவாகரன் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அவரது இடப்புறத்தில் பைக்கில் ஓர் இளைஞர் அமர்ந்திருக்க, சாலை ஓரமாக இருந்த சிறிய சரக்கு ஆட்டோவின் அருகில் மற்றொருவர் நின்றுகொண்டிருக்கிறார். அவரது முன்பக்கமாக சற்று தொலைவில் வேறொருவரும் நிற்கிறார். திவாகரனின் வலப்புறமாக போனில் பேசிக்கொண்டும், சாதாரணமாக நடந்துகொண்டும் சிலர் வரும்போது எதுவும் வித்தியாசமாகவும், விபரீதமாகவும் தெரியவில்லை. ஆனால் நொடிப் பொழுதில் அந்த அமைதி முழுவதும் கலைந்துவிட்டது.
வலப்பக்கத்தில் முகத்தை மூடியவாறு மூன்றாவதாக வந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீச, ஒரே வெட்டில் திவாகரன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். கோபம் தெறிக்க நான்கு முறை திவாகரனை வெட்டிய பின்னர் தனது கையிலிருந்த கத்தியைத் தொப்பி அணிந்து வந்த மற்றொருவரிடம் கைமாற்றுகிறார்.
அவரும் ஆக்ரோஷத்துடன் நான்கு முறை திவாகரனை வெட்டுகிறார். இதைப் பார்த்துப் பதறிய இடப்புறம் நின்ற மூன்று பேரும் அலறி அடித்து ஓடிவிட்டனர். பைக்கில் அமர்ந்திருந்த இளைஞர் பைக்கை விட்டுவிட்டுத் தெறித்து ஓடிவிட்டார். திவாகரனுடன் பேசிக்கொண்டிருந்தவர் நண்பனுக்கு உதவலாமா, வேண்டாமா என்று ஒரு கணம் யோசிப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஆத்திரத்துடன் ஆயுதம் ஏந்தி வந்த கும்பலைப் பார்த்ததும் தனது உயிரையேனும் மீட்டுவிட வேண்டும் என்று தப்பித்து ஓடிவிட்டார். அதே நேரம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் எதிரில் சரக்கு சைக்கிளை ஓட்டி வந்த நபரும் செய்வதறியாது ஓடிவிடுகிறார்.
எட்டு பேர், 20 நொடி கை கால், தலை, முகம் என உடல் முழுவதும் 53 வெட்டுகள். இதைத் தாண்டியும் திவாகரன் உயிருடன் இருந்திருந்தால் அதிசயம் என்றுதான் கூறியிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய அதிசயம் அங்கு நிகழவில்லை. பழிவாங்கல் படலத்தில் பதற்றத்தை மட்டும் மீதம் வைத்து திவாகரன் மரணமடைந்துவிட்டார்.
திவாகரனின் மரணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அங்கு வந்த 20 வயதைத் தாண்டாத அந்த எட்டு பேரும், இரண்டு, நான்கு, நான்கு, ஆறு, ஏழு, ஏழு, பத்து, பதின்மூன்று என தனித்தனி எண்ணிக்கையில் திவாகரனை வெட்டித் தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். ரத்த வெள்ளத்தில் தத்தளித்த திவாகரன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மரணமடைந்துவிட்டார்.
கொலைசெய்யப்பட்ட திவாகரன் ஏற்கனவே கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டு ரவுடியாக அறியப்பட்டவர். காசிமேடு காவல் நிலையத்திலும் திவாகரன் பெயரில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. ஒருவேளை அந்தக் கொலைக்குப் பதிலாக திவாகரன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த விசாரணை ஐந்து நாட்கள் பின்னோக்கி அவர்களை அழைத்துச் சென்றது.
சில தினங்களுக்கு முன்னர் காசிமேடு கடற்கரை அருகே நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார் திவாகரன். அந்தவழியாக விமல் என்ற இளைஞர் நடந்துசெல்ல குடிபோதையில் இருந்த திவாகரனும் நண்பர்களும் அவரைத் தங்கள் அருகில் அழைத்துள்ளனர். விமலை அடித்துத் தாக்கியது மட்டுமல்லாமல் முட்டி போட சொல்லி வற்புறுத்தி அவமானப்படுத்தியுள்ளனர். வலியும் அவமானமும் தாங்கமுடியாத விமல் தன் நண்பர் லோகேஷிடம் இதுகுறித்துக் கூறி அழுதுள்ளார்.
நண்பனின் அவமானத்துக்குப் பழிவாங்க நினைத்த லோகேஷ், திவாகரனைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளார். நான்கு நாட்களாகச் சரியான தருணம் அமையக் காத்திருந்த லோகேஷ், புதன்கிழமை சூழல் அமைந்ததும் திவாகரனுக்கு முடிவுகட்டி விட்டார். எனினும் வேறு பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்னும் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோரம் காசிமேடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”