2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, 370ஆவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சென்ற காஷ்மீர் இன்றோடு (பிப்ரவரி 5) ஆறு மாதங்களைக் கடக்கிறது.
ஜம்மு காஷ்மீர் அதன் சிறப்பு அந்தஸ்தை இழந்து, அரசியல் வெற்றிடம் உருவான நிலையில் ஃபரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள் மேலும் 24 முக்கிய அரசியல்வாதிகள் இன்னும் சிறையிலேயே இருக்கின்றனர். இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டதாக அரசு அறிவித்தாலும் கட்டுப்பாடுகளுக்குக் குறைவில்லை.
மேலும் சந்தைகள் இப்போது திறந்திருந்தாலும், பொது மற்றும் தனியார் போக்குவரத்து சாதாரணமானது என்றாலும், வணிகம் பெரும் சரிவைச் சந்தித்திருப்பதாக வணிகர்கள் கூறுகிறார்கள்.
“சந்தைகள் 80%க்கும் அதிகமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன” என்று ஸ்ரீநகரின் ரெசிடென்சி சாலையில் ஒரு முக்கிய வர்த்தகர் கூறினார். காஷ்மீர் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை வணிகத்திற்கு ரூ.18,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
“ஆறு மாதங்களாக நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை; குறிப்பாக கருத்து சுதந்திரம் முற்றிலும் மூச்சுத் திணறலாகவே உள்ளது. அரசுக்கு ஒத்துழைக்கிற முக்கிய அரசியல்வாதிகள் மட்டுமே மகிழ்விக்கப்படுகிறார்கள்” என்கிறார் மனித உரிமை ஆர்வலரும் சிவில் சமூகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான குராம் பெர்வாஸ்.
தேசிய மாநாடுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற காஷ்மீரின் முக்கியக் கட்சிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் சேர்ந்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
அதேநேரம் லடாக் உற்சாகத்தில் இருக்கிறது. லடாக் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுள்ளதால் எங்களுக்கு ஒரு பெரிய நன்மை என்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி அனயத் அலி மகிழ்ச்சி அடைகிறார்.
ஜம்முவில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட் பி.எல்.டிக்கூ, தனது மூத்த மகனை பயங்கரவாதிகள் கொன்றதை அடுத்து தனது குடும்பத்தினருடன் காஷ்மீரில் இருந்து தப்பி வந்தவர். அவர், “ஆறு மாதங்களாகப் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. 370ஆவது பிரிவை எதிர்த்தவர்களுக்கு இது ஒரு வகையான தார்மிக வெற்றியாகத் தெரிகிறது. நிர்வாக மட்டத்தில், இன்னும் குழப்பம் உள்ளது. மக்கள் திருப்தி அடையவில்லை. எந்த வேலையும் இல்லை. வேலையின்மை, மோசமான சாலைகள், செயலிழந்த மின்மாற்றிகள், சேதமடைந்த வடிகால்கள் மற்றும் பாதைகள் போன்ற பிரச்சினைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன என்கிறார். இந்தத் தகவல்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் பதிவு செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட தலைவர்கள் இப்போதைக்கு விடுதலை செய்யப்பட சாத்தியம் இல்லை என்றும், கைது செய்யப்பட்ட தலைவர்களின் ஆய்வு மனுவை இன்னும் காஷ்மீர் நிர்வாகம் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து அநியாயமாக சிறை வைக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தில் நிகழவே கூடாத ஒன்று. ஆனால், காஷ்மீரில் ஒன்பது வயதுக் குழந்தைகள் மீதெல்லாம் தேச துரோக வழக்குகள் பாய்ச்சப்பட்டிருப்பதைப் பார்த்தால் அரசியல்வாதிகளின் கைதுகள் எல்லாம் ஆச்சரியமான விஷயமே இல்லை” என்கிறார்.
ஆறு மாதங்கள் ஆன பின்பும் இன்னும் காஷ்மீரின் ரணம் ஆறவில்லை. அரசியல் வெற்றிடமாகவே இருக்கிறது.�,”